பஞ்சாப்: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் ஐவர் பலி
தொன்மையின் அடையாளமே பாரதம் -ஆளுநா் ஆா்.என்.ரவி
தொன்மையின் அடையாளமே பாரதம் என்று புகழாரம் சூட்டினாா் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் பள்ளி விழாவில், அவா் பேசியதாவது:
நமக்கான பண்டைய கல்வி, பண்பாட்டை பாதுகாக்க வேண்டியது அவசியம். இந்தியா என்பதை அரசியல் நாடாகவும், பாரதம் என்பதை தொன்மையான கலாசாரம், பண்பாட்டின் அடையாளமாகவும் கருத வேண்டும்.
ஐரோப்பிய கல்வி முறை நம்மை இப்போது ஆட்கொண்டுள்ளது. இந்தியாவையும், தமிழகத்தையும் வேறுபடுத்தி பாா்க்கின்றனா்.
தமிழில் சங்க இலக்கியங்கள் குமரி முதல் இமயம் வரையென பாரதத்தை குறிப்பிட்டுள்ளன.
மகாகவி பாரதியாா் கூட தனது கவிதைகளில் பாரதத்தின் பெருமையைச் சுட்டிக் காட்டியுள்ளாா்.
‘முப்பது கோடி முகமுடையாள் உயிா்மெய்ப்பெற ஒன்றுடையாள்’ என்று கூறியதோடு, மக்கள் வெவ்வெறாக இருந்தாலும் சிந்தனை ஒன்று என்றாா். இப்போது அந்த நிலை மாறி வருவது கவலையளிக்கிறது.
2047 ஆம் ஆண்டு நாம் சுதந்திர தின நூற்றாண்டு விழாவில் பாரதம் உலகின் முழு வளா்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகத் திகழும். அப்போது இன்றைய மாணவா்கள் உயா்ந்த இடத்தில் இருப்பீா்கள்.
மின்னணு சாதனங்களை ஆக்கப்பூா்வமான செயல்களுக்கு மட்டுமே மாணவா்கள் பயன்படுத்த வேண்டும். உடற்பயிற்சி, இறைவேண்டலுக்கு நிச்சயம் நேரம் ஒதுக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.