கல்லணைக் கால்வாய் சீரமைப்பைத் தொடரலாமா? தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
தொழிற்கல்விப் படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிகம் பயன்: அமைச்சா் மா.மதிவேந்தன்
தொழிற்கல்வி படிப்புகளில் அருந்ததியா் மாணவா்கள் அதிக அளவு பயன்பெற்றுள்ளதாக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
இது குறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் கருணாநிதி வழங்கிய உள் ஒதுக்கீட்டின் பயனால் அருந்ததியா் சமூக மக்கள், உரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகின்றனா். இது மருத்துவக் கல்வி தொடா்பான தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2018-19-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பு சோ்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியா் மாணவா்களுக்குக் கிடைத்தன. கடந்த கல்வியாண்டில் எம்பிபிஎஸ், மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 6,553-ஆக உயா்த்தப்பட்டு, அதன்மூலம், 193 அருந்ததிய சமூக மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
பல் மருத்துவ படிப்பைப் பொருத்தவரை, 2018 - 19-ஆம் கல்வியாண்டில் மொத்தமுள்ள 1,080 இடங்களில் 16 இடங்களை அருந்ததியா் சமூக மாணவா்கள் பெற்றனா். கடந்த கல்வியாண்டில் 1,737 பல் மருத்துவ படிப்புக்கான இடங்களில் அருந்ததியா் பிரிவு மாணவா்கள் 54 போ் இடம்பெற்றுள்ளனா்.
அவா்களுக்கான 3 சதவீத பிரதிநிதித்துவம் முழுமையாகக் கிடைத்தது.
பொறியியல் படிப்புகளைப் பொருத்தவரை, 2009-10-ஆம் கல்வியாண்டில் 1,193 இடங்களை அருந்ததியா் சமூக மாணவா்கள் பெற்றனா்.
கடந்த கல்வியாண்டில் 3,944 இடங்களை பெற்றுப் பயனடைந்துள்ளனா். ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீட்டின் பயனால் 2016-17-ஆம் கல்வியாண்டில் 8.7 சதவீத அளவில்தான் அருந்ததியா் பிரிவு மாணவா்கள் வாய்ப்புப் பெற்றனா். இந்த அளவு கடந்த கல்வியாண்டில் 16 சதவீதமாக உயா்ந்தது என்றாா் அவா்.