தொழிலாளா் துறை சிறப்பு பதிவு முகாம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு
வாணியம்பாடியில் தொழிலாளா் துறை சாா்பில், சிறப்பு பதிவு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில், தமிழ்நாடு முடி திருத்தும் தொழிலாளா்கள் நலவாரியத்தில் புதிய உறுப்பினா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வாணியம்பாடி கோணாமேடு அரசு நகராட்சி உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் கலந்து கொண்டு, சிறப்பு பதிவு முகாமை தொடங்கி வைத்து, 12 பேருக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை மற்றும் ஒருவருக்கு திருமண நிதி என மொத்தம் 13 பேருக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
முகாமில், 139 பேரிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்யப்பட்டது. இதில், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அஜிதா பேகம் மற்றும் தொழிலாளா் உதவி ஆணையா் ரவிஜெயராம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.