தொழிலாளி அடித்துக் கொலை; 9 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை; 25 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்ட தீர்ப்பு!
தூத்துக்குடி அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவர், கடந்த 1999-ம் ஆண்டு தூத்துக்குடி ரூரல் பஞ்சாயத்து உறுப்பினராகவும், அலங்காரத்தட்டு ஊர்த் தலைவராகவும் இருந்து வந்தார். இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், 4 மகன்களும் உள்ளனர். கடந்த 17.09.1999 அன்று அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயில் திருவிழாவிற்கு அவரது நண்பரான முத்துவுடன் சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை.

இதற்கிடையில் தனது கணவர் வின்சென்ட்டை காணவில்லை என தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் 18.09.1999 அன்று காவல் நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் வின்சென்ட் உயிரிழந்துவிட்டதாக கிருஷ்ணம்மாளுக்கு தகவல் கிடைத்தது. வின்சென்டின் உறவினர்கள், பொதுமக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கிருஷ்ணம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல தகவல்கள் அம்பலமானது.
வின்சென்ட், முத்து, மரியதாஸ் ஆகியோர் வெடி பொருட்கள் வைத்திருந்ததாக விசாரணைக்கு தாளமுத்து காவல் நிலையத்திற்கு மூன்று பேரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அப்போதைய ஆய்வாளர் சோம சுந்தரம் தலைமையிலான போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பணியில் இருந்த போலீஸார் மூன்று பேரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் வின்சென்ட் காவல் நிலையத்திலேயே உயிரிழந்தார். பிரேத பரிசோதனையிலும் தாக்கப்பட்டது உறுதியானது.

இதனையடுத்து அப்போதைய ஆய்வாளர் சோமசுந்தரம், இறந்த நேரத்தில் பணியில் இருந்த ஜெயசேகரன், ஜோசப்ராஜ், செல்லதுரை, வீரபாகு, சிவசுப்பிரமணியன், சுப்பையா, உதவி ஆய்வாளர் ராம கிருஷ்ணன் ஆகிய 11 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட நீதிமன்றங்களில் நடந்து வந்தது. கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் தூத்துக்குடி 1வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கினை நீதிபதி தாண்டவன் விசாரணை செய்து வந்தார்.
குற்றம்சாட்டப்பட்ட 11 பேரும் நேற்று (5-ம் தேதி) ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் எஸ்.எஸ்.ஐ சிவசுப்பிரமணியன் 9வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் தலைமை காவலர் ரத்தினசாமி ஆகியோர் மீதான குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி இருவரையும் விடுதலை செய்தார். மற்ற 9 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். ஆய்வாளர் சோமசுந்தரம் தற்போதும் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

ஜெயசேரன், செல்லதுரை, வீரபாகு, சுப்பையா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழக்கு விசாரணையின்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் முழுமையாக ஓய்வு பெற அரசு அனுமதிக்கவில்லை. இந்த சம்பவம் நடந்து 25 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது தண்டனை பெற்றவர்கள் இந்த வழக்கினை விசாரிக்காமல் இருப்பதற்காக மட்டும் 28 முறை தடை உத்தரவு பெற்றுள்ளனர் என்பது ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது. டி.எஸ்.பி உட்பட 9 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது தென் மாவட்டங்களிலேயே இதுதான் முதல்முறை எனக் கூறப்படுகிறது.