செய்திகள் :

`தோல்விகளைக் கொண்டாடும் அமெரிக்கா' - தமிழ் IAS அதிகாரியின் ஹார்வர்டு அனுபவங்கள்

post image

உலகின் அபாயகரமான நிலவமைப்பையும், தீவிரமான பருவநிலைகளையும் கொண்ட இமயமலை பிராந்தியம், லாகுல் ஸ்பிட்டி இந்தியாவில், லேவுக்கு அடுத்து பெரிய மாவட்டமான லாகுல் ஸ்பிட்டியின் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய முதல் தமிழர் இரா.செல்வம் ஐ.ஏ.எஸ்.

உலகளாவிய நிர்வாக அணுகுமுறையை ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் காரணமாக அமெரிக்கா சென்று, உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வர்டில் பொது மேலாண்மை பயின்றார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்களை விவசாயம், கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, நிதி நிர்வாகம் என்று ஒவ்வொரு துறையையும் இந்தியாவில் எப்படி இனி நாம் பார்க்க வேண்டும் என்று ‘ஹாட்வர்டு நாட்கள்’ என்ற நூலில் எழுதியுள்ளார்.
மத்திய உள்துறை முதல் உரத்துறை பணியாற்றிவர், தற்போது சென்னையில் உள்ள மத்திய அரசின் தோல் ஏற்றுமதிக் கழகச் செயல் இயக்குநர். பரபரப்பான காலையில் வேளையில் அவர் அலுவலகத்தில் சந்தித்தோம். அமைதியாக, ஆழமாகப் பேசத் தொடங்கினார்.

இரா.செல்வம் ஐ.ஏ.எஸ்

‘‘என் சொந்த ஊர், அரியலூர் மாவட்டம், அய்யப்பநாயக்கன்பேட்டை; பின் தங்கிய கிராமம்தான். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் சிறு வயது முதல் விவசாயப் பணிகளில் ஈடுபடுவேன். இப்போதும்கூட ஊருக்குச் சென்றால், வயல்களில் இறங்கி, விவசாயப் பணிகள் செய்வேன். என்னைப் புதுப்பித்துக்கொள்ள அந்தப் பணி உதவுகிறது. அரசுப் பள்ளியில்தான் படித்தேன். நன்றாகப் படித்து மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. ஆனால், அதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. முதுகலையை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்தேன்.

பெற்றோருடன்...

வேளாண்மையில் முனைவர் பட்டம் படிக்க விரும்பினேன். ஆனால், அதற்கான வாய்ப்பு அமையவில்லை. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஆண்டிமடத்தில் நவப்ரா என்ற தேசிய நீர்ப்பிடிப்புத் திட்டத்தில் தற்காலிகப் பணி கிடைத்தது. இங்கு பணியாற்றியபோது, கல்லூரி நண்பர் ஒருவர் ‘ஏன் நீங்கள் குடிமைப் பணி தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ் ஆகக் கூடாது?’ என்ற விதையை என்னுள் விதைத்தார். இடையில் தமிழ்நாடு வேளாண்மை துறையில் வேலைகிடைத்தது. அந்தப் பணியைச் செய்து கொண்டே ஐ.ஏ.எஸ் தேர்வுக்குப் படித்தேன்.

நூல் வெளியிட்டு விழாவில்

ஐந்தாவது முறை, அந்தத் தேர்வில் வெற்றி பெற்றேன். ஐ.ஏ.எஸ் பணி கிடைத்தது. ஆனால், எனக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை. காரணம், இமாச்சலப்பிரதேசத்தில் பணி ஒதுக்கீடு செய்திருந்தார்கள். தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவை செய்ய நினைத்தது நடக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது. பரவாயில்லை, அந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு உதவி செய்வோம் என்று அந்த இமயமலைச் சாரலை நோக்கிப் புறப்பட்டேன். நான் ஆட்சியராகப் பணிபுரிந்த பகுதி லாகுல் ஸ்பிட்டி மாவட்டத்தில் 6 மாதங்களுக்குத்தான் விவசாயம் நடைபெறும். மீதி 6 மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. எனவே, பள்ளி வசதிகள், சாலை மேம்பாடு... மக்கள் நலத்திட்டம் என... அரசுப் பணிகள் அனைத்தையும் அந்த 6 மாதத்தில் செய்து முடிப்போம். இமாச்சலப்பிரதேசத்தில் பணியாற்றியது எனக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்றுதான் சொல்வேன். அரியலூர் மாவட்டத்தில் மழைக்கு ஏங்கும் பகுதியிலிருந்து, ஆறு மாதங்கள் குளிரில் நடுங்கும் மாவட்டத்துக்குப் பொறுப்பேற்று வழிநடத்திச் சென்றதும் , அங்கு வாழும் மக்களின் வாழ்வில் 'வீடு தேடி நிர்வாகம்' திட்டம் மூலம் வீட்டிலிருந்தே சாதிச்சான்றிதழ் பெறும் முறையை அறிமுகப்படுத்தினேன். உலகிலேயே அதிக அளவு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள சீபக்தான் (Seabuckthorn) செடிகளின் இலை, பழங்கள் விற்பனைக்கு ஏற்பாடு.... போன்றவை மூலம் அம்மலைவாழ் மக்களின் வாழ்வில் என்னால் முடிந்த அளவு மாற்றத்தை ஏற்படுத்தினேன்.

இமாச்சலப்பிரதேசத்தில்...

அடுத்து, புதுடெல்லி வந்து மத்திய அரசின் சில துறைகளில் பணியாற்றினேன். அந்த சமயத்தில் அரசு சார்பில் அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகம் குறித்துப் படிக்க வாய்ப்புகிடைத்தது. என்னைப் புதுப்பித்துக் கொண்டேன்...’’ என்றவர் சிறிய அமைதிக்குப் பிறகு மீண்டும் தொடர்ந்தார்.

‘‘அது 2015-ம் ஆண்டு. அமெரிக்காவுக்கு முதல் பயணம். வானுயர்ந்த கட்டிடங்களும் அந்த நாட்டின் கலாசாரமும் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அதுவும் ஹார்வார்டு பல்கலைக்கழகம் என் வாழ்வில் பல மாற்றங்களை உருவாக்கியது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்...

அங்கு யாரும் அமெரிக்காவுக்காக மட்டும் சிந்திப்பதில்லை. ஒட்டுமொத்த உலகத்துக்கும் சிந்திக்கிறார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் தண்ணீர் பஞ்சம் என்றால் அதற்கு என்ன தீர்வு என்பதைப் பற்றி யோசிக்கிறார்கள். ஒரு திட்டம் தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தை அலசி ஆராய்கிறார்கள்.
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு வகுப்பும் பெரிய அனுபவமாக இருந்தது. என் வாழ்வில் மிக முக்கியமான கற்றல் அங்கு நிகழ்ந்தது. கேள்விகளின் அடிப்படையிலேயே வகுப்புகள் இருக்கின்றன. பேராசிரியர்கள் மட்டுமல்ல; மாணவர்களும் பேராசிரியர்களை நோக்கிக் கேள்வி எழுப்பி பதில் பெறுவதைப் பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்.

தலைமைத்துவ வகுப்புகள் எடுத்த பேராசிரியர் ஹாய்பிட்ஸ், மிக முக்கியமான ஆளுமை. அவர் வகுப்புகள் நம்முடைய அதுவரையிலான பார்வைகளை மாற்றி அமைப்பவை. அவர் பாடம் நடத்தும் முறையே முற்றிலும் புதுமையானது. ஓர் உதாரணம். எங்களுக்கு ஒரு பரிசோதனை வழங்கினார் பேராசிரியர் ஹாய்பிட்ஸ். எங்கள் துறையில் நாங்கள் சந்தித்த மாபெரும் தோல்விகளை இனம் கண்டு சொல்வதோடு, அந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு, பின்பு தோல்விக்கான காரணங்களையும் சிந்திக்க வேண்டும்.

மாணவர்களாக அங்கு வந்திருக்கும் நாங்கள் அனைவரும் ஒவ்வொரு நாட்டில் முக்கிய பணிகளைச் செய்துவருபவர்கள். அதன்படி, விவாதிக்க வேண்டும். அது தோல்வியில் முடிந்ததற்கான காரணங்களை ஒவ்வொருவரும் தத்தம் துறையில் எடுத்த முக்கியமான முடிவுகளை அலச வேண்டும்.

ஹார்வர்டு...

'உங்கள் முடிவு ஏன் தோல்வியில் முடிந்தது: சரியான முறையில் புரிந்துகொள்ளவில்லையா, உடன் பணிபுரிந்தோர் ஒத்துழைப்புத் தரவில்லையா, நிதி இல்லையா, உரிய அதிகாரம் வழங்கப்படவில்லையா? ...

சரி, இப்போது ஒரு வாய்ப்புக் கிடைத்தால், எப்படி அந்தக் கொள்கையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவீர்கள், அதைச் சுற்றி எழும் பிரச்சினைகளை எப்படிக் கையாளுவீர்கள்? இப்படி ஒவ்வொருவரும் தங்கள் முடிவு தோல்வியில் முடிந்ததற்கான காரணங்களைத் தனியாக ஆராய்ந்து, அதைக் குழுவில் விவாதித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்றார் ஹாய்பிட்ஸ்.

அவரின் வகுப்புகள் என்னுள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. தோல்விகள் தொடர்பில் என்னுடைய அணுகுமுறை மாறியது. தோல்விகள் அவமானத்துக்குரியவை அல்ல; படிப்பினைகள் என்றெல்லாம் பொதுவாகப் பேசப்பட்டாலும், தோல்விகள் கொண்டாடப்படுவதை, அங்கேதான் நான் பார்த்தேன். தோல்விக்கான காரணங்களை அறியும்போது, மீண்டும் அதே தவறைச் செய்வது தடுக்கப்படுகிறது. அந்தத் தோல்வியைக் கடந்து வாழ்வின் அடுத்த இலக்கை நோக்கிப் பயணிக்க இவ்விதமான ஆய்வுகள் துணைபுரிகின்றன. எடுக்கப்படும் முடிவுகளுக்கும் அதில் ஏற்படும் வெற்றி, தோல்விகளை கற்பித்தல் முறை நிர்வாகத்துக்கு மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்க்கையில் ஆராய்வதற்கும் பயனுள்ளதாக இருந்தது.

அது ஒரு சிறப்பான கற்பித்தல் முறை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் முறை உலகம் முழுக்க பரவ வேண்டும். ஒவ்வொருவரின் வெற்றி, தோல்விக்குப் பின்னாலும் பெற்றோர்கள், வெற்றியும் தோல்வியும் தனிமனிதனை மட்டுமே சார்ந்திருப்பதில்லை. நண்பர்கள், பள்ளி, அரசு நிர்வாகம், கொள்கை முடிவுகள், பொருளாதார, சமூக, வரலாற்று ஏற்றத்தாழ்வுகள், பிறப்பிடங்கள், தனிப்பட்ட முயற்சிகள் அனைத்தும் காரணமாக அமைகின்றன.

ஒவ்வொருவரின் வெற்றி, தோல்வியின்போது அதற்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். அதைத் திறந்த மனதுடன் நிர்வாகமும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். வெற்றியில் கர்வம் கொள்வதும், தோல்வியில் துவண்டு போவதும் தேவையற்ற ஒன்று. உழைப்பின் உன்னதத்தையும் நேரத்தின் மதிப்பையும் கருத்தில் கொண்டு முயற்சிகள் தொடர வேண்டும்" என்று உற்சாகத்துடன் சொல்லி முடித்தார்.

மதுரை: UPSC / TNPSC குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம்.!

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் யூ.பி.எஸ்.சி மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் மதுரையில் நடைபெறவுள்ளது. குரூப் தேர்வு வருகின்ற மார்ச் 23... மேலும் பார்க்க

``இப்போது வரை இந்தியில் படிக்கவோ எழுதவோ பேசவோ தெரியாது" - ஆர்.பாலகிருஷ்ணனின் அதிரடி பதிவு

'மும்மொழிக் கொள்கை திணிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார் சொல்லும், தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்திற்கு நிதி கிடையாது' என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சு தமிழக அரசியல் களத்... மேலும் பார்க்க