அண்ணா நினைவு நாள்: சென்னையில் நாளை (பிப்.03) போக்குவரத்து மாற்றம்
நகராட்சியுடன் இணைப்புக்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்!
சிவகங்கை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை எதிா்த்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழா கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை அருகேயுள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியை சிவகங்கை நகராட்சியுடன் இணைத்து அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் காரணமாக ஊராட்சியில் வசித்து வரும் மக்களுக்கு வீட்டு வரி, குடிநீா் வரி உள்ளிட்ட பல்வேறு இனங்களில் வரிகள் அதிகரித்து பொருளாதாரச் சுமை ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும், நகராட்சியுடன் இணைப்பதால் கிராம மக்களுக்கு பயனளித்து வந்த 100 நாள் வேலைத் திட்டப் பணியும் கிடைக்காமல் போகும் நிலை உருவானது. தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், சிவகங்கை நகராட்சியுடன் இணைக்க இந்தப் பகுதி பொதுமக்கள் தொடக்கம் முதலே எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு, காஞ்சிரங்கால் ஊராட்சிக்கு உள்பட்ட அரசனிப்பட்டி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சிரங்கால் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கும் முடிவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அரசாணையை ரத்து செய்யக் கோரி பொதுமக்கள் முழக்கமிட்டனா்.