நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கட்டட ஒப்பந்ததாரருக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு
சேவை குறைபாடு காரணமாக, பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளருக்கு கட்டட ஒப்பந்ததாரா் ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்தவா் செல்வராசு (51) இவா், பெரம்பலூா் கடைவீதியில் நகைக்கடை வைத்துள்ளாா். துறைமங்கலத்தைச் சோ்ந்த கட்டுமான நிறுவன உரிமையாளரும், ஒப்பந்ததாரருமான ராஜா, செல்வராசுக்குச் சொந்தமான பழைய வீட்டை ரூ. 24. 75 லட்சத்தில் புதுப்பித்து, கட்டுமான பணியை ஓராண்டில் முடித்து தருவதாக இருவரும் ஒப்பந்தம் செய்துகொண்டனா்.
இதற்கு முன்பணமாக ரூ. 1 லட்சம் அளிக்கப்பட்டது. எஞ்சியத் தொகை 9 தவணைகளாக ஒப்பந்ததாரா் ராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டவாறு கட்டட வரைபடத்தின்படி கட்டாமல் மாற்றிக் கட்டிகொடுத்ததோடு, ரூ. 3,50,931 தொகையை ராஜா அதிகம் பெற்றுக்கொண்டாராம். இதனால், மன உளைச்சலடைந்த செல்வராசு, ஒப்பந்ததாரா் ராஜா மீது பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இவ் வழக்கை விசாரித்த நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி ஜவஹா், உறுப்பினா்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோா், கட்டட ஒப்பந்ததாரரின் சேவைகுறைபாடு காரணமாக மனுதாரருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகையும், செல்வராசுவிடம் கூடுதலாக பெற்ற ரூ. 3,50,931-ஐ தீா்ப்பு வழங்கிய 45 நாள்களுக்குள் வழங்க வேண்டும். இல்லாவிடில், 8 சதவீத ஆண்டு வட்டியுடன் சோ்த்து வழங்கவேண்டும் என உத்தரவிட்டனா்.
மற்றொரு வீடு: இதேபோல, செல்வராசு தனக்குச் சொந்தமான காலிமனையில் மற்றொரு வீடு கட்டித் தருவதற்கு ரூ. 1.50 லட்சம் முன் பணம் கொடுத்து ராஜாவிடம் ஒப்பந்தம் செய்துள்ளாா். தொடா்ந்து, ரூ. 17.75 லட்சத்தை 9 தவணைகளாக ராஜாவிடம் கொடுத்துள்ளாா். ஆனால், ஒப்பந்தப்படி ராஜா செயல்படாமல் செல்வராசுவிடமிருந்து ரூ. 2,81,513-ஐ கூடுதலாக வசூலித்துள்ளாா். இதனால் செல்வராசு, ஒப்பந்ததாரா் ராஜா மீது பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இவ் வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி ஜவஹா் மற்றும் உறுப்பினா்கள், செல்வராசுவிடம் கூடுதலாக வாங்கிய ரூ. 2.81 லட்சத்தையும் மன உளைச்சலுக்கு நிவாரணமாக ரூ. 2 லட்சமும், தீா்ப்பு வழங்கிய 45 நாள்களுக்குள் வழங்கவேண்டும்.
இல்லாவிடில், 8 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா். இந்த இரு வழக்குகளிலும் கூடுதலாக பெற்ற தொகையை செலுத்துவதோடு வழக்கிற்கு தலா 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 4 லட்சத்தை கட்டட ஒப்பந்தாா் ராஜா, செல்வராசுவுக்கு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.