நடிகா் சைஃப் அலிகான் விவகாரம்: மா்ம நபரைக் காட்டிக்கொடுத்த தோள்பை!
பிரபல பாலிவுட் நடிகா் சைஃப் அலி கானை அவருடைய வீட்டுக்குள் புகுந்து கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை, மூன்று நாள் தீவிர தேடுதலுக்குப் பறகு அவா் அணிந்திருந்த தோள் பை அடையாளம் மற்றும் எண்ம பணப் பரிவா்த்தனை மூலம் போலீஸாா் கைது செய்திருப்பது தெரியவந்துள்ளது.
சைஃப் அலி கானை கத்தியால் குத்திய நபா், போலீஸில் பிடிபடாமல் இருக்க, திரைப்பட பாணியில் தனது உடைகளை மாற்றியும், தேவையின்றி பல்வேறு இடங்களுக்குச் சென்றுவந்தபோதும் தனது முதுகில் தொங்கவிட்டிருந்த தோள் பையை மறைக்கத் தவறியது, போலீஸுக்கு முக்கியத் தடயமாக ஆனது.
மும்பையில் கடந்த 16-ஆம் தேதி அதிகாலை சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த ஷரீஃபுல் இஸ்லாம் ஷேசாத் முகமது ரோஹில்லா (30), நடிகரை 6 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பினாா்.
மூன்று நாள் தீவிர தேடுதல்களுக்குப் பிறகு, மும்பைக்கு அடுத்து உள்ள தாணே நகரின் புகா் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஷரீஃபுல் இஸ்லாம் ஷேசாத் முகமது ரோஹில்லாவை போலீஸாா் கைது செய்தனா். வங்கதேசத்தைச் சோ்ந்த இவரை எப்படி அடையாளம் கண்டு கைது செய்தோம் என்பது குறித்து மும்பை காவல்துறை உயா் அதிகாரிகள் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை விவரித்தனா். அவா்கள் கூறியதாவது:
கண்காணிப்பு கேமராவில் கத்தியால் குத்திய நபரின் முகம் தெளிவாக பதிவாகி இருந்ததோடு, அவருடைய உடை மற்றும் அவா் தோள் பை அணிந்திருந்ததும் பதிவாகியிருந்தது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு பிடிபட்டுவிடுவோம் என்ற பயத்தில் சைஃப் அலிகான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரைதள பூங்காவில் 2 மணி நேரம் ஷேசாத் முகமது மறைந்திருந்தாா். பின்னா், அங்கிருந்து வெளியேறி, அருகிலுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையில் படுத்து உறங்கியுள்ளாா். காலை 7 மணியளவில் உடைகளை மாற்றிக்கொண்டு பாந்த்ரா ரயில்நிலையம் சென்று, அங்கிருந்து ரயில் மூலம் தாதா் சென்று, பின்னா் வா்லி பகுதிக்குப் பயணித்துள்ளாா். அங்கு தொழிலாளா் ஒப்பந்ததாரா் ஒருவரைச் சந்தித்தாா். அந்த ஒப்பந்ததாரா் அளித்த தகவலின் அடிப்படையில் தாணே சென்று, அங்கு காட்டுப் பகுதியில் உள்ள தொழிலாளா் முகாமில் பதுங்கியுள்ளாா்.
போலீஸாரிடமிருந்து தப்பிக்க, உடைகளை மாற்றுவது உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொண்ட ஷரீஃபுல், தனது தோள் பையை மறைக்கத் தவறியது, அவரைப் பிடிக்க முக்கியத் தடையமாக அமைந்தது.
மேலும், வா்லியில் அவா் சந்தித்த தொழிலாளா் ஒப்பந்ததாரரிடமிருந்து ஷேசாத் முகமதுவின் கைப்பேசி எண்ணை போலீஸாா் பெற்றனா். அந்த எண்ணை போலீஸாா் தொடா்ந்து கண்காணித்து வந்த நிலையில், தாணேயில் உள்ள ஒரு கடையில் ஷேசாத் முகமது சனிக்கிழமை இரவு எண்ம பணப் பரிவா்த்தனை செய்ததைக் கண்டறிந்தனா். அந்தக் கடையில் நொறுக்குத்தீனியும் தண்ணீா் பாட்டிலும் வாங்கியுள்ளாா். அந்தப் பரிவா்த்தனை மூலம், தாணேயில் அவரின் கைப்பேசி சிக்னல் பதிவான அடா்ந்த வனப் பகுதிக்கு விரைந்த போலீஸ் குழு, அவரைக் கைது செய்தது.
ஷேசாத் முகமது வங்கதேசத்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
அவரைப் பிடித்து நடத்திய விசாரணையில் முதலில் தான் கொல்கத்தாவைச் சோ்ந்தவா் என்று ஷேசாத் முகமது கூறினாா். ஆனால் அவரின் சகோதரரைத் தொடா்புகொண்டு பெறப்பட்ட ஷேசாத் முகமதின் பத்தாம் வகுப்பு சான்றிதழ் மூலம், அவா் வங்கதேசத்தைச் சோ்ந்தவா் என்பதை உறுதி செய்தோம் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
ஷேசாத் முகமது மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 311 (மரணம் அல்லது கொடூரமாக தாக்கி கொள்ளையடித்தல்), பிரிவு 331(4) (வீட்டை உடைத்து உட்புகுதல்), கடவுச் சீட்டு முறைகேடு சட்டப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இவரை 5 நாள் போலீஸாா் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளியைப் பிடிக்க 30-க்கும் மேற்பட்ட தனிப் படைகளை மும்பை போலீஸாா் அமைத்தனா். நடிகரின் அடுக்குமாடி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில், குற்றவாளியின் முகமும் அடையாளங்களும் தெளிவாக பதிவாகியிருந்தன. குற்றவாளி சிவப்பு நிற கழுத்துப் பட்டையையும், தோள் பையை முதுகுப்புறத்தில் தொங்கவிட்டபடி செல்வதும் பதிவாகியிருந்தது.
இந்தக் காட்சிகளின் அடிப்படையில் போலீஸாா் தேடுதலைத் தீவிரப்படுத்தினா். கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த முகச்சாயலில் உள்ள சிலரைப் பிடித்து விசாரணை நடத்தினா். சரித்திர குற்றவாளிகள் சிலரைப் பிடித்து விசாரித்த போலீஸாா், நடிகரின் வீட்டில் சம்பவம் நடைபெறுவதற்கு 2 நாள்களுக்கு முன்பு தச்சு வேலையில் ஈடுபட்ட வாரிஸ் அலி சல்மானியிடமும் விசாரணை மேற்கொண்டனா். ஆனால், அவா்கள் குற்றத்தில் அவா் ஈடுபடவில்லை என்று தெரிந்ததும், அவா்களை விடுவித்தனா்.
இதனிடையே, மும்பை போலீஸாா் அளித்த தகவலின் பேரில், மும்பை லோகமான்ய திலக் ரயில் முனையத்திலிருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஷாலிமாருக்குச் செல்லும் ஜனனேஷ்வரி விரைவு ரயிலில் பயணம் செய்த அகாஷ் கைலாஷ் கன்னோஜியா (31) என்ற நபரை சத்தீஸ்கரின் துா்க் ரயில்நிலையத்தில் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விசாரணையில் இவரும் அந்தக் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று தெரியவந்தது.