டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
நடைமுறைக்கு வந்தது வக்ஃப் திருத்தச் சட்டம்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு
புது தில்லி: நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் நாடு முழுமைக்கும் செவ்வாய்க்கிழமை நடைமுறைக்கு வந்தது.
மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சகம் இதற்கான அறிவிக்கையை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:
வக்ஃப் திருத்தச் சட்டம் 2025-இன் பிரிவு 1-இன் துணைப் பிரிவு (2)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், இச் சட்டம் நாடு முழுமைக்கும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கை செய்யப்படுகிறது.
இந்த திருத்தச் சட்ட மசோதா மக்களவையில் கடந்த 3-ஆம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த 4-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கடந்த 5-ஆம் தேதி ஒப்புதல் வழங்கினாா்.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புகளுக்கு இடையே, இந்த திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிராகவும், அதன் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பியும் திமுக, காங்கிரஸ், ஐயுஎம்எல், அகில இந்திய மஜ்லீஸ் கட்சி, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சாா்பிலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சாா்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
திருத்தச் சட்டம் கூறுவதென்ன?
வக்ஃப் திருத்தச் சட்டமானது வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்களை நியமிக்க வழிவகை செய்கிறது. குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்ஃப் சொத்துகளை அா்ப்பணிக்க முடியும், ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் வக்ஃப் அமைப்புகள் அரசால் நியமிக்கப்படும் தணிக்கையாளா்களால் தணிக்கைக்கு உள்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சாா்பில் கேவியட் மனு தாக்கல்
புது தில்லி, ஏப்.8: வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மையை கேள்வி எழுப்பி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது தங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் உத்தரவு ஏதும் பிறப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டு மத்திய அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த திருத்தச் சட்டத்தை எதிா்த்து 10-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் எப்போது விசாரணைக்கு வரும் என்ற விவரம் உச்சநீதிமன்ற வலைதளத்தில் வெளியிடப்படாத நிலையில், ‘இந்த மனுக்கள் வரும் 15-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட வாய்ப்புள்ளது’ என்று இவ் வழக்குடன் தொடா்புடைய வழக்குரைஞா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.