நம்மை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் விகடன்! - பெண்ணின் நெகிழ்ச்சி #நானும்விகடனும்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
ஒரு சிறுகதை எப்படி இருக்க வேண்டும்?
நாளிதழ்கள் வார இதழ்களில் வரும் சிறுகதைகளில் ஒரு நல்லவன் இருக்க வேண்டும் இன்னொருபுறம் ஒரு கெட்டவன் இருக்க வேண்டும். கெட்டவன் தீமையையே செய்தாலும் நல்லவன் நல்லதையே செய்வான். இறுதியில் கெட்டவன் எப்படி மனம் திருந்துகிறான் என்பதே கதையின் முடிவாக இருக்கும்.
நான் சிறுவயதில் படித்த சிறுகதைகள் இது போன்ற கருத்துக்களைக் கூறுவதாகத் தான் இருந்தன.
சிறுகதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென யார் கூறியது?
ஜெயகாந்தன், சுஜாதா, ஜெயமோகன் மற்றும் பல சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளை நான் அறியும் முன்பே சிறுகதைகளின் பல பரிணாமங்களை அறியச் செய்தது விகடன் தான்.
ஆனந்த விகடனில் வெளிவந்த சிறுகதைகள் என்னுள் பல தாக்கங்களை நிகழ்த்தியுள்ளன.
பிடித்தப் பாடலின் வரிகள் அவ்வப்போது மனதிற்குள் ஓடுவது போல் விகடனில் படித்த சில சிறுகதைகளின் காட்சி எனக்குள் அவ்வப்போது தோன்றி மறைகின்றன.
ஜப்பான் நாட்டில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு தமிழனிடம் ஜப்பானிய பெண் உரையாடுகிறாள். அதில் அவன் ஏதோ விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறான் என்பதை உணர்ந்து அவனை தெளிவுற செய்வாள். அந்தப் பெண்ணின் பெயரைக் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறான். சில நாட்களுக்குப் பின் தன்னைக் காப்பாற்றிய ஜப்பானிய பெண்ணின் பெயரின் தமிழ் அர்த்தம் அறிவதாய் கதை முடியும் ஆனால் நம்மால் உடனே கதையை விட்டு நகரமுடியாமல் செய்யும் முடிவு. அந்தப் பெண்ணின் பெயரின் அர்த்தம் 'மரணத்தின் கடவுள்'.
ஏதோ ஒரு சிறு விஷயம் கூட நம்மை அதில் இருந்த அகலவிடாமல் செய்யும். சுலபமாக கடந்து போக முடியாத பல சிறுகதைகளை விகடன் தந்துள்ளது.
'இஷ்டதிரி போடும்
தொழிலாளியின் வயிற்றில்
சுருக்கம்'
இயக்குனர் லிங்குசாமியின் கவிதை. இதுவே விகடனில் வெளிவந்த தன் முதல் கவிதை எனப் பெருமையாக கூறுகிறார்.

எத்தனை கவிஞர்கள் விகடனில் தன் கவிதை வருவதை பெரும் அங்கீகாரமாகக் கருதுகின்றனர். எத்தனை பெரிய எழுத்தாளர்களை விகடன் உருவாக்கி கொண்டிருக்கிறது.
வாசகர்களுக்கும் சொல்வனம் எவ்வளவு மெய்சிலிர்க்க வைக்கிறது.
'எல்லாம் மாய அர்த்தங்களால்
அலைக்கழிக்கும் வெற்றுச் சொற்கள்.
நான் பெண், நீ ஆண்.
பிரபஞ்சங்களின் முழுமை
நமக்குள்தான் புதைந்து கிடக்கிறது.
தேடுவதும் அடைவதுமான வாழ்வில்,
நான் உன்னையும் நீ என்னையும்
ஏமாற்றுகிறோம்’ - `ஒவ்வா’ கவிதை நூலில் இருந்து ஆண்பால் பெண்பால் அன்பால் தொடரில் குறிப்பிடப்பட்டிருந்த கவிதை.
ஆண், பெண் உறவுகளை எப்படிப் புரிந்துகொள்வது, எதிர்பாலின அன்பு, நட்பு மற்றும் சில முக்கிய சிக்கல்களைப் பற்றி அலசி ஆராய்ந்த தொடர் விகடனில் வெளிவந்த ஆண்பால் பெண்பால் அன்பால். வாரம் ஒரு பிரபலங்களின் கட்டுரை வெளிவந்தது கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
பகிர்வில்தான் வாழ்வின் மகிழ்ச்சியே சாத்தியமாகிறது. எல்லா வேலைகளையும் பகிரும்போதுதான் குடும்பங்களில் இசை உண்டாகும் என்கிறார் முத்துக் கிருஷ்ணன் அரசியல் செயல்பாட்டாளர்
'சமீபத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வில் பாலின சமத்துவம் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அப்பாவும் மகனும் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேர்கிறது. அப்பா இறந்து விடுகிறார். மகன் மருத்துவமனைக்கு ஆபத்தான கட்டத்தில் கொண்டு செல்லப்படுகிறார். அப்போது அங்கிருந்த மருத்துவர் ‘இவன் என் மகன், என்னால் மருத்துவம் பார்க்க முடியாது’ என்று மறுத்துவிடுகிறார்.

`அப்படி என்றால் அந்த மருத்துவர் யார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நீங்கள் என்ன பதில் யோசிக்கிறீர்கள்? அந்தக் கேள்விக்கான பதில், அந்த மருத்துவர் அந்தச் சிறுவனின் தாயார். மருத்துவர் என்கிற சொல்லைக் கேட்டதும், ஏன் நமக்கு ஓர் ஆணின் உருவமே மனதில் எழுகிறது? இப்படியான யதார்த்தமான பாலினம் குறித்த புரிதலை ஏற்படுத்தக்கூடிய விவாதங்களே இன்றைய தேவை' என்கிறார் ஆண்பால் பெண்பால் அன்பால் தொடரில் வெளிவந்த கட்டுரையில் சுகிதா ஊடகவியாளர்.
ஒவ்வொரு தொடர் முடியும் பொழுதும் -வெளிச்சம் பாய்ச்சுவோம் என தொடர்ச்சியை அறிவிக்கும்.
உண்மையிலேயே இந்த தொடர் ஆண் பெண் சமத்துவத்திற்கு வெளிச்சம் பாய்ச்சிவிட்டு தான் சென்றுள்ளது.
அடுத்ததாய் எனக்குப் பிடித்த திரைப்படங்கள் அல்லது நான் பார்க்க விரும்பும் திரைப்படங்களுக்கு விகடன் என்ன மதிப்பெண் தருகிறது என்பதை அறிய ஆவலாய் எதிர்பார்ப்பேன். நடுநிலை தன்மையோடு வரும் சினிமா விமர்சனங்களையும் நான் பார்த்து புரிந்து கொண்ட கதையையும் ஒப்பிட்டு பார்த்துள்ளேன்.
வலைபாயுதேவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பல விஷயங்கள் படிக்க சுவரஸ்யமாக இருக்கும்.
'குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதக் கூட்டங்கள் தங்களின் தனித்த அடையாளங்கோடு செழித்திருந்தன. இயற்கையோடு இயந்த வாழ்வு. தேவை மட்டுமே ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. உழைப்பும் விளைச்சலும் பொதுச் சொத்து. கொண்டாட்டமும் குதூகலமும் இயல்பின் பிரதிபலிப்பு.'
வார இதழில் வரும் தொடர்கதைகளை நான் பெரிதாகப் படிக்க விரும்பியதில்லை. எங்கே ஒன்றிரண்டு வாரம் கதையை படிக்க முடியாமல் போனால் கதையோடு ஒன்ற முடியாமல் போய் விடுமோ என்பதால். ஆனால் வேள்பாரியில் மேற்கோள் காட்டப்படிருக்கும் வரிகளிலேயே மயங்கி திளைத்திருக்கிறேன்.
'மாலை நேரம்தான் வருவாள். அப்போதுதான் முல்லை மலரத் தொடங்கும். அந்த மனம் யாவரையும் மயக்கும். காற்று எங்கும் சுகந்தம் வீசும்'
இப்படி விகடனில் தொடராக வரும் பொழுதே நான் வேள்பாரியை அனுபவித்து ரசித்திருக்கிறேன்.
அடுத்ததாய் திரையெல்லாம் செண்பகப் பூ தொடரைப் பற்றி சொல்ல விரும்புகிறேன்.
'பெண்கள் தங்களின் படைப்புகள் மூலமாக எதைச் சொல்ல நினைக்கிறார்கள் என்பதை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துப் பார்த்தபோது, அவர்கள் எல்லோருமே மானுட அன்பைப் பற்றியே வெவ்வேறு கதைகளின் மூலமாகப் பேசுகிறார்கள். தங்களுடைய நாட்டின் அரசியலைத் துல்லியமாக வரையறுக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு பெண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற எந்த அறிவுரையையும் அவர்கள் படத்தில் சொல்வதில்லை. வன்முறைக் காட்சிகளை எவ்வளவு பொறுப்பாகக் கையாள முடியுமோ, அப்படிக் காட்டியிருக்கிறார்கள். போர் குறித்த படமாக இருந்தாலும் இருபக்க நியாயத்தையும் சொல்பவர்களாக இருக்கிறார்கள். எங்குமே கழிவிரக்கமோ, இரக்கமோ கோரவில்லை.'
திரையெல்லாம் செண்பகப் பூ தொடர் முழுவதுமே இப்படி ஒரு புதுவித பார்வை. பெண்ணிய கதாபாத்திரங்களை ஜா. தீபா அவர்கள் செய்த ஆய்வு அற்புதமாய் வெளிப்படிருக்கும்.
அவள் விகடனில் வரும் சாதிக்கும் பெண் தொழில் அதிபர்கள் மற்றும் சமூக சேவைகள் புரியும் பெண்களின் பேட்டிகள் ஊக்கமளிக்கும் விதம் இருக்கும். பெண்கள் தங்கள் உடல் நலனையும் மன நலனையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் பக்கங்கள் சிறப்பானதாய் இருக்கும்.
'ராணி கையவெச்சா அது ராங்கா போனதில்லை' கார் மெக்கானிக் புஷ்பராணியை பற்றிய கட்டுரையின் தலைப்பு. சமூகத்தின் கட்டுப்பாடுகளை தகர்த்து யார் வேண்டுமானாலும் தங்களுக்கு பிடித்த துறையில் ஈடுபடலாம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கட்டுரைகளை அவள் விகடனில் காணலாம்.
'கொரியன் கிளாஸ் ஸ்கின் மட்டும் அல்ல சொரியாசிஸ் ஸ்கின்னும் அழகுதான்' ஒரு சில பிரச்சனைகளால் வீட்டிலேயே அடைந்திருக்கும் பெண்களை வெளிக் கொண்டுவரும் அற்புதம் நிகழ்த்தும் கட்டுரைகளையும் விகடனில் படிக்க நேர்ந்துள்ளதில் பெருமை கொள்கிறேன்.
அதுவரை கையிலே தொட்டு படித்த விகடனை கொரோனா லாக்டௌன் கால கட்டத்தில் தான் முதன் முதலில் இணையத்தில் சப்ஸ்கிரைப் செய்து படிக்க ஆரம்பித்தேன்
கொரோனா லாக் டௌனில் வீட்டிலேயே பயத்துடன் இருந்த எனக்கு சக்தி விகடனில் வெளிவந்திருந்த சில கட்டுரைகள் நம்பிக்கை அளித்தன.
முந்தைய இதழ்களையும் இணையத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தப் பொழுது பெரும் மகிழ்ச்சி கொண்டேன்.
எல்லோருக்கும் இருக்கும் அதே ஆசை எனக்குள்ளும் உண்டு. விகடனில் என்னுடைய படைப்பு வெளிவர வேண்டும் என்று.
ஆனந்த விகடனில் வாசகர் மேடை மற்றும் அவள் லாக் டௌனில் நடந்த நல்ல விஷயங்களை பகிரும் வாசகர் பக்கங்களுக்கு ஆர்வமாய் எழுதி அனுப்பியுள்ளேன். என்னுடைய பதிலும் விகடனில் இடம் பெற்ற பொழுது பேரானந்தம் கொண்டேன்.
சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் ஆர்வமாய் பகிர்ந்து மகிழ்ந்தேன்.
சிறுகதைகளும் எழுதி அனுப்பி இருக்கிறேன். ஆனால் இன்னும் தனித்துவமாய் எழுத வேண்டும் என்பதை நிராகரிப்பு தான் புரிய வைக்கின்றது. அப்பொழுது தானே இன்னும் சிறப்பானவை வெளி வரும்.
இவ்வழியே நம் சிந்தனைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது விகடன்.
மொழியோடு எண்ணங்களை எப்படி கோர்க்க வேண்டும் சமூக சிக்கல்களை எப்படி அணுக வேண்டும் எழுத்தின் வடிவங்களை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற பல நுண்ணறிவை எனக்குள் விதைத்து விகடனே!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!