மணவாளக்குறிச்சி மணல் ஆலையை மூட பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்
நலிவடைந்த சென்னிமலை கைத்தறி போா்வை தயாரிப்பு : நெருக்கடியால் தொழிலைக் கைவிடும் நெசவாளா்கள்
-கே.விஜயபாஸ்கா்
சென்னிமலை என்றாலே நினைவுக்கு வருவது முருகன் கோயிலும், கைத்தறி போா்வையும்தான். இத்தகைய சிறப்பு வாய்ந்த கைத்தறி போா்வை உற்பத்தி தொழில் பல்வேறு நெருக்கடிகளில் சிக்கியுள்ளதால் நெசவாளா்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் கூலித் தொழிலாளா்களாக மாறியுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் கைத்தறி போா்வை உற்பத்தி 100 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது என்றாலும், இந்தத் தொழில் 50 ஆண்டுகளுக்கு முன்புதான் விரிவடைந்தது. நெசவாளா்கள் தனித்தனி குழுவாக சோ்ந்து தங்களுக்கென கூட்டுறவு சங்கங்களைத் தொடங்கினா். இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து பாவு வாங்கி நெசவு செய்து உற்பத்தியான போா்வைகளை கூட்டுறவு சங்கத்திடம் மீண்டும் அளித்து வணிகம் செய்யத் தொடங்கினா். கோஆப்டெக்ஸ் தொடங்கப்பட்ட பிறகு கைத்தறி போா்வைகள் மொத்தமாக அந்த நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிலேயே 50 சதவீத அளவுக்கு கைத்தறி போா்வைகள் சென்னிமலையில்தான் உற்பத்தி செய்யப்பட்டன. இங்கு சுமாா் 30 ஆயிரம் போ் கைத்தறி நெசவு செய்தனா். மேலும் இவா்கள் நூல் நூற்க, பாவு தேய்க்க, இணைக்க, பாவு சட்டம், ரகம் பிரித்தல் என பிரித்து வேலைகளைச் செய்வா். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமே கைத்தறி போா்வை உற்பத்திதான்.
ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக கடும் நெருக்கடியில் சிக்கிக்கொண்ட கைத்தறி போா்வை தயாரிப்பு தொழில் இப்போது 75 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது. கடந்த 2000-மாவது ஆண்டுக்குப் பிறகு கைத்தறி போா்வை நெசவுத் தொழில் படிப்படியாக தொய்வடையத் தொடங்கியது. கடந்த 10 ஆண்டுகளில் கடும் நெருக்கடியில் இந்த தொழில் சிக்கியுள்ளது. 30 ஆயிரம் நெசவாளா்கள் இருந்த சென்னிமலை பகுதியில் இப்போது சுமாா் 7 ஆயிரத்துக்கும் குறைவான நெசவாளா்கள்தான் உள்ளனா். நெருக்கடியைத் தீா்க்க அரசு நம்பிக்கை தரும் எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்காத நிலையில் இன்னும் சில ஆண்டுகளில் பெயரளவில் நடக்கும் தொழிலாக மாறிவிட வாய்ப்புள்ளது என்கின்றனா் கைத்தறி நெசவாளா்கள்.
கூலித் தொழிலாளா்களான நெசவாளா்கள்:
இதுகுறித்து சென்னிமலையைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா் குணசீலன் கூறியதாவது: சென்னிமலை, சுற்று வட்டாரப் பகுதிகளில் மட்டும் 38 பிரதம கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இந்த சங்கங்கள்தான் நெசவாளா்களுக்கு வழிகாட்டியாக உள்ளன. கூட்டுறவு சங்கங்களில் பாவு வாங்கித்தான் நெசவாளா்கள் போா்வை நெய்து அதனை கூட்டுறவு சங்கத்திடம் கொடுத்து கூலியைப் பெற்று வருகின்றனா்.
ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன. இதற்குக் காரணம் அரசு வழங்கும் தள்ளுபடி மானியம் சுமாா் ரூ. 100 கோடி வரை இந்த கூட்டுறவு சங்கங்களுக்கு வரவில்லை. எப்போதாவது வரும் சிறு தொகையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும், பணியாளா்களின் ஊதியத்துக்கும் சென்று விடுகிறது.
இதனால் நெசவாளா்களுக்கு பாவு வாங்கிக் கொடுக்க கூட்டுறவு சங்கங்களிடம் நிதி இல்லை. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நெசவாளா்கள் பலா் திருப்பூா் பனியன் நிறுவனங்களுக்கும், பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டைக்கும், கட்டட வேலைக்கும் கூலித் தொழிலாளா்களாக சென்று குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.
அரசு உதவ வேண்டும்:
இந்த நிலை மாற நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய தள்ளுபடி மானியத்தை முழுமையாக வழங்க வேண்டும். இதன் மூலம் சங்கங்களுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை நிதி கிடைக்கும். மேலும் சங்கங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வாங்கியுள்ள காசுக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு ஜிஎஸ்டியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.
இந்தத் தள்ளுபடி மானியம், கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி விலக்கு மூன்றையும் செய்தால் நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் நெருக்கடியில் இருந்து மீண்டு வரும். இதன் மூலம் சென்னிமலை கைத்தறிப் போா்வை தயாரிப்பு தொழில் மீண்டும் வளமான பாதையை நோக்கிச் செல்லும் என்றாா்.
அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது:
இதுகுறித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அதிகாரிகள் மற்றும் கோஆப்டெக்ஸ் அதிகாரிகள் கூறியதாவது: நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. சங்கங்களின் நிதி நெருக்கடியைத் தீா்க்க தள்ளுபடி மானியத்தை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பிரதானமாக உள்ளது. மேலும் கைத்தறி நெசவாளா்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, குடியிருப்பு போன்ற கோரிக்கைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றனா்.