நள்ளிரவில் உக்ரைன் தலைநகரில் ரஷியா தாக்குதல்! 9 பேர் பலி!
உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.
உக்ரைன் தலைநகரான கீவ்விலுள்ள 4-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் மீது இன்று (ஏப்.24) அதிகாலை 1 மணியளவில் ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 6 குழந்தைகள் உள்பட 63-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீவ் நகர ராணுவம் கூறியதாவது, ரஷியா நடத்திய தாக்குதலில் அங்குள்ள ஏராளமான கட்டடங்கள் தகர்க்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த 42-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டடங்களில் தீ பற்றி எரிந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்கா தலைமையிலான ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்பட்ட சில மணி நேரங்களில் இந்தத் தாக்குதலானது நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!