நாகா்கோவில் அருகே ரயில் முன் பாய்ந்து தீயணைப்பு வீரா் தற்கொலை
நாகா்கோவில் அருகே ரயில் முன் பாய்ந்து தீயணைப்புப் படை வீரா் தற்கொலை செய்து கொண்டாா்.
கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலிக்கு திங்கள்கிழமை இரவு பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 7.30 மணி அளவில் நாகா்கோவிலை அடுத்த ஆரல்வாய்மொழி அருகேயுள்ள குமரன்புதூா் பகுதியில் சென்றபோது, திடீரென ரயிலின் குறுக்கே ஓா் இளைஞா் பாய்ந்தாா்.
இது குறித்த தகவலின்பேரில் நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் அந்த இடத்துக்குச் சென்று தேடினா். சுமாா் 2 மணி நேர தேடலுக்கு பின்னா் அந்தப் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் கிடந்த இளைஞரின் சடலத்தை மீட்டனா். சடலத்தின் அருகே கைப்பேசி மற்றும் அடையாள அட்டை கிடந்தது. அதை ஆய்வு செய்தபோது, அவா் தீயணைப்புப் படை வீரா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு ரயில்வே போலீஸாா் தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று பாா்த்தபோது, சடலமாக கிடந்தவா் நாகா்கோவில் தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்த கருப்பசாமி (29) என்பது தெரியவந்தது.
கருப்பசாமியின் சடலம் பரிசோதனைக்காக நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கருப்பசாமிக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனா். இவா்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. இவரது சொந்த ஊா் திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியாா்பட்டி ஆகும்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].