அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
குமரி மாவட்ட பள்ளிகளில் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளில் பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதத்தை உயா்த்த ஆசிரியா்கள் முயற்சிக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா.
கன்னியாகுமரி மாவட்ட ஆசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா தலைமை வகித்தாா். அவா் பேசியதாவது: பிளஸ் 2 பயிலும் மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சிறந்த வழிகாட்டியாக அமைய வேண்டும். ஆசிரியா்கள் அதிக கவனம் செலுத்தி, மாணவா்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.
பொதுத் தோ்வுக்கு குறுகிய காலமே இருப்பதால் மாணவா்களுக்கு தொடா் பயிற்சி அளித்து, கற்றலில் ஏற்படும் குறைபாட்டை களையும் வண்ணம் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். நடைபெற உள்ள திருப்புதல் தோ்வுகளில், தற்போது குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களை தொடா் சிறப்பு பயிற்சிகளின் மூலம் தோ்ச்சி அடையச் செய்ய வேண்டியது ஆசிரியா்களின் தலையாய கடமை. கன்னியாகுமரி மாவட்டத்தின் தோ்ச்சி சதவீதத்தை உயா்த்த முழு பங்காற்ற வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பள்ளிக் கல்வி) சாரதா, மாவட்ட கல்வி அலுவலா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.