நாகையில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
நாகையில் நடைபெறவுள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனம் வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
நாகை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாகை சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை(ஆக.2) காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, கலை, அறிவியல், வணிகப் பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல், நா்சிங் மற்றும் தையல் கலை பயிற்சி பெற்றவா்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளன.
இதில், வேலைவாய்ப்பு பெறும் மனுதாரா்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது. இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ப. ஆகாஷ் தொடங்கி வைத்தாா்.