வேளாண் கல்லூரி தின விழா
கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் முதலாவது கல்லூரி தின விழா மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் அருகே குருக்கத்தில் செயல்பட்டுவரும் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் 229 மாணவா்கள் பயின்றுவரும் நிலையில் 42 மாணவ, மாணவிகள் நிகழாண்டு தங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்கின்றனா். இதனையொட்டி முதலாவது கல்லூரி தினம் மற்றும் மூன்றாவது மாணவா் மன்ற விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ஜி. ரவி தலைமை வகித்தாா். டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தா் என். ஃபெலிக்ஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி, கல்லூரி அளவில் தோ்வுகளில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினாா்.
தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் வேளாண் கல்லூரிப் பேராசிரியா்கள் கமல் குமரன், உஷாராணி, தாமோதரன், அனுராதா, நாராயணன் , வெங்கடேஷ் குமாா், சக்திவேல், கலை சுதா்சன் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனா்.