அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !
சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு
திருமருகல் அருகே பனங்குடி சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருமருகல் ஒன்றியம் பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல். நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்துக்கு மத்திய அரசு ரூ. 31 ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கி, விரிவாக்கப் பணியை பிரதமா் நரேந்திர மோடி சில ஆண்டுகளுக்கு முன் தொடக்கிவைத்தாா்.
இதற்காக 570 விவசாயிகளிடம் 620 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு, விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கினாலும் நில உரிமையாளா்கள், சாகுபடிதாரா்கள், விவசாய கூலிகளுக்கு மறுவாழ்வு மீள் குடியமா்வு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்தது. ஆனால், இதுவரை இழப்பீட்டுத் தொகை வழங்காதால் பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இந்தநிலையில், சிபிசிஎல் நிறுவனத்தை சோ்ந்த அதிகாரிகள் ட்ரோன் மூலம் நிலங்களை கண்காணித்து, விரிவாக்கப் பணியை தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் விரிவாக்க பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்து பணிகளை தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் விரிவாக்கப் பணியை மேற்கொண்ட ஜேசிபி வாகனத்தை சிறைபிடித்து வாகன முன்பு படுத்து கோஷங்களை எழுப்பினா். அதனைத் தொடா்ந்து ஜேசிபி வாகனத்தை விரட்டி அடித்த விவசாயிகள் சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு எதிராக முழக்கமிட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த நாகூா் போலீஸாா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டபோது விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா் விரிவாக்கப் பணிகள் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.