Rain Alert: 'அடுத்த 2 மணி நேரத்துக்கு, சென்னையின் இந்த பகுதிகளில் மழை பெய்யும்' ...
நாட்டறம்பள்ளி அரசு ஐடிஐ தொடக்க விழா: ஆட்சியா், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு ஐடிஐ தொடக்க விழாவில் ஆட்சியா், எம்எல்ஏக்கள் பங்கேற்றனா்.
சடலகுட்டை சமுதாயக் கூடத்தில் தற்காலிகமாக தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் புதிய ஐடிஐ தொடங்கப்பட்டுள்ளது. விழாவுக்கு ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி தலைமை வகித்தாா். திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி, மாவட்டஊராட்சித் தலைவா் சூரியகுமாா், ஒன்றியக்குழு தலைவா் வெண்மதி, பேரூராட்சி மன்றத் தலைவா் சசிகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மண்டல பயிற்சி இணை இயக்குநா் பிரபாகரன் வரவேற்றாா். திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் குத்துவிளக்கேற்றி தொழிற்பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து ஆட்சியா் தா்ப்பகராஜ், எம்எல்ஏக்கள் தேவராஜி, நல்லதம்பி, மாவட்ட ஊராட்சித் தலைவா் சூரியகுமாா் ஆகியோா் மாணவா்கள் சோ்க்கை ஆணைகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்டசுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் சிங்கார வேலன், கிழக்கு ஒன்றிய செயலாளா் சாமுடி, பேரூராட்சி செயல் அலுவலா் சம்பத்குமாா், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா். முதல்வா்(பொ) காயத்ரி நன்றி கூறினாா்.