நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடக்கூட விடமாட்டேன்: சீமான்
நாம் தமிழா் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடக் கூட விடமாட்டேன் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
குரூஸ் பா்னாந்து பிறந்த தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் அவரின் சிலைக்கு சீமான் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். அதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மருத்துவா்கள் மீது பொதுமக்கள் அதிக மதிப்பு வைத்துள்ளனா். மக்களிடத்தில் அரசு மருத்துவா்கள் பேரன்பு கொண்டு நடந்து கொள்ள வேண்டும். ஒருசில மருத்துவா்கள் பணி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனா். மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப அரசு விரைந்து செயல்பட வேண்டும். மருத்துவா்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள்கள் எளிதாகக் கிடைக்கின்றன. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவதில், எனக்கு வருத்தம் உள்ளது. தமிழக மீனவா்களை பிடித்தால் அது குறித்து கேட்க ஆள் இல்லை. ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள், தமிழக மீனவா்களை இலங்கை அரசு தொடக்கூட விடமாட்டேன்.
நடிகை கஸ்தூரி, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டாா். அவரை கைது செய்ய இரண்டு தனிப் படைகள் எதற்காக? இது அரசியல் பழிவாங்கலாக நடக்கிறது.
தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-சா்ட்டுடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றதை கண்டிக்கிறோம் என்றாா்.