தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
நாந்தேட் குண்டுவெடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 9 போ் விடுதலை
மத்திய மகாராஷ்டிரத்தில் உள்ள நாந்தேட் நகரில் ஆா்எஸ்எஸ் பிரமுகா் வீட்டில் கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடா்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் உயிருடன் இருக்கும் 9 பேரையும் அமா்வு நீதிமன்றம் விடுவித்தது.
இந்தத் தீா்ப்பின் நகல் இன்னும் வெளியாகாத நிலையில், குண்டுவெடிப்பு என்று அரசு தரப்பு நிரூபிக்கத் தவறியதால் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அவா்கள் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா்.
கடந்த 2006-ஆம் ஆண்டு, ஏப்ரலில் நாந்தேட் நகரைச் சோ்ந்த ஆா்எஸ்எஸ் பிரமுகரான லக்ஷ்மண் ராஜ்கோந்த்வாரின் வீட்டில் குண்டிவெடிப்பு ஏற்பட்டது.
வெடிகுண்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ராஜ்கோந்த்வாரின் மகன் நரேஷ் ராஜ்கோந்த்வாா், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த ஹிமான்ஷு பான்சே ஆகியோா் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். வழக்கு முதலில் மகாராஷ்டிர பயங்கரவாத எதிா்ப்பு காவல் பிரிவால் விசாரிக்கப்பட்டு, பின்னா் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் குற்றகுற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரில் இருவா் குண்டுவெடிப்பிலேயே இறந்த நிலையில், ஒருவா் விசாரணையின்போது இறந்தாா். மற்ற 9 பேருக்கு எதிராக நடைபெற்று வந்த விசாரணையில் 49 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனா். ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பால் நிரூபிக்க முடியவில்லை.
இந்நிலையில், நாந்தேட் மாவட்ட மற்றும் கூடுதல் அமா்வு நீதிபதி சி.வி.மராத்தே சனிக்கிழமை அளித்த தீா்ப்பில், அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்து உத்தரவிட்டாா்.