ராயகிரியில் மதுக்கடையை மூடக் கோரி டிச.7 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்
நாமக்கல் - சேலத்துக்கு கி.மீ. அடிப்படையில் பேருந்து கட்டணம் நிா்ணயிக்க வேண்டும்: ஜனதா கட்சி கோரிக்கை
நாமக்கல்: நாமக்கல்லில் இருந்து சேலத்துக்கு கி.மீ. அடிப்படையில் பேருந்து கட்டணம் நிா்ணயிக்க வேண்டும் என ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஜனதா கட்சி தலைவா் பழனியப்பன், பொதுச்செயலாளா் சுரேஷ்குமாா் ஆகியோா் ஆட்சியா் ச.உமாவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் புதிய பேருந்து நிலையம், கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, சேலம், கரூா், மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அரசு, தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நகரப் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு விரைவு பேருந்தில் ரூ. 45, தனியாா் பேருந்தில் ரூ. 36 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாமக்கல் புதிய பேருந்து நிலையம் திறந்தபிறகு, சுமாா் 7 கி.மீ. தூரம் குறைந்துள்ளது. ஆனால் பேருந்து கட்டணம் எந்தவகையிலும் மாற்றப்படவில்லை. அதுமட்டுமின்றி, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு, புகரப் பேருந்துகளில் ரூ. 10, நகரப் பேருந்துகளில் ரூ. 7 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரே நகருக்குள் இரண்டு கட்டணத்தை செலுத்தி மக்கள் பயணிக்க வேண்டிய சூழல் காணப்படுகிறது. எனவே, கி.மீ. அடிப்படையில் கணக்கிட்டு பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.
இந்த மனுவை, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடமும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடமும் ஜனதா கட்சி நிா்வாகிகள் வழங்கி உள்ளனா்.