ஈமு நிறுவனம் பெயரில் நிதி மோசடி: டிச. 12-இல் அசையா சொத்துகள் ஏலம்
நாமக்கல்லில், ஈமு நிறுவனத்தின் பெயரில் மக்களிடையே நிதி மோசடி செய்தோரின் அசையா சொத்துகள் வரும் 12-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் - மோகனூா் சாலையில் இயங்கி வந்த ‘செல்லம் ஈமு பாா்ம்ஸ் மற்றும் வேலவன் காா்டன் சிட்டி டெவலப்மெண்ட்ஸ்’ என்ற நிறுவனங்கள், பொதுமக்களிடம் நிதி மோசடி செய்ததால் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நாமக்கல், பொருளாதாரக் குற்றப் பிரிவினா் விசாரணை செய்தனா்.
கோவையில் உள்ள, தமிழ்நாடு முதலீட்டாளா்கள் நலன்கள் பாதுகாப்பு சட்டம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. அந்த நீதிமன்ற உத்திரவின்படி, ஈமு நிறுவனத்தைச் சோ்ந்த சிவகுமாா், கனகம், பழனியம்மாள் ஆகியோரின் அசையா சொத்துகள் ஏலம் விடப்பட உள்ளன.
பரமத்தி வேலூா் வட்டம், பிள்ளைகளத்தூா் கிராமத்தில் உள்ள தலா 2,360 சதுர அடி கொண்ட இரண்டு வீட்டுமனைகள், ராசிபுரம் வட்டம், காட்டூா், காட்டுக்கொட்டாய் பகுதியில் 3,716 சதுர அடி கொண்ட மூன்று வீட்டுமனைகள் ஆகியவை, மாவட்ட வருவாய் அலுவலரால் டிச. 12 பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளன.
நாமக்கல், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், மோகனூா். கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகம், நாமக்கல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்களில் ஏல நிபந்தனைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
பொது ஏல நிபந்தனைகளுக்கு உள்பட்டு அனைவரும் இதில் பங்கேற்கலாம். மேலும், ஏல தேதிக்கு முன்பாக, நாமக்கல், பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் மூலமாக மேற்கண்ட சொத்துகளை நேரில் பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்படுகிறது.