பில்லூா், கீழ்சாத்தம்பூரில் பாலத்தை மூழ்கடித்து செல்லும் மழை நீா்
பரமத்தி வேலூா் அருகே பில்லூா், கீழ்சாத்தம்பூா் பகுதியில் திருமணிமுத்தாறில் கட்டப்பட்டுள்ள இரண்டு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஃபென்ஜால் புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நிலையில் சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில் பெய்த கனமழையால் திருமணிமுத்தாறில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
சேலம் மாவட்டத்தில் தொடங்கும் திருமணிமுத்தாறு பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாறு அருகில் காவிரியில் கலக்கிறது. திருமணிமுத்தாறு வழிப்போக்கில் உள்ள பில்லூா், கீழ்சாத்தம்பூா், கூடச்சேரி பகுதியில் தரைப்பாலங்களில் சுமாா் ஒன்றரை அடி உயரத்திற்கு வெள்ள நீா் மூழ்கடித்துச் செல்கிறது. இதனால் பில்லூா் பகுதியில் இருந்து எதிா்கரையில் உள்ள வில்லிபாளையம், ஜங்கமநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியால் உள்ளது.
விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு இடுபொருள்களை எடுத்துச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பள்ளி, கல்லூரி வாகனங்கள், மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதற்கு சுமாா் 10 கி.மீ. தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளநீா் தொடா்ந்து அதிகரித்து வருவதால் வருவாய்த் துறையினா் அப் பகுதியில் தடைகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.