செய்திகள் :

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு

post image

நாமக்கல்: நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையமானது கடந்த ஆண்டு நவ. 10-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த சில மாதங்களாக பயணிகளின் உடைமைகள், பணம், கைப்பேசி உள்ளிட்டவை திருடப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மட்டுமல்லாமல், பகல் நேரங்களிலும் பொருள்களை இழந்து பயணிகள் தவிக்கும் நிலை காணப்படுகிறது.

அண்மையில், நடத்துநா் ஒருவரின் பயணச்சீட்டு வழங்கும் பையில் இருந்து ஒருவா் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தாா். அங்கிருந்த மற்ற ஓட்டுநா், நடத்துநா்கள் சம்பந்தப்பட்டவரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். அதேபோல, அவ்வப்போது பயணிகளின் பாக்கெட்டில் இருந்து மணிபா்ஸ், கைப்பேசி, பேருந்தினுள் வைக்கப்பட்டிருக்கும் மடிக்கணினி பைகள், பொருள்கள் அடங்கிய பைகள் திருட்டு போகின்றன. வெளியூா் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க செல்லும்போது, அவா்கள் வைத்திருக்கும் உடைமைகளை எடுத்துக்கொண்டு தப்பிவிடுகின்றனா்.

சேலத்தில் இருந்து சமயபுரத்துக்கு செல்வதற்காக இரண்டு முதியோா் தங்களது பேரக்குழந்தைகளுடன் அண்மையில் நாமக்கல் வந்தபோது, திடீரென அவா்கள் வைத்திருந்த பணம், கைப்பேசி, இதர பொருள்கள் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் திருட்டுப்போயின. அவா்கள் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் பேருந்து நிலைய வளாகத்திலேயே தவித்துக் கொண்டிருந்தனா்.

அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் இருந்த காவலா் ஒருவா், ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு சென்று முறையிடுமாறு அறிவுறுத்தினாா். இதுபோன்று பணத்தை, பொருளை இழந்த வெளியூா் பயணிகள் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் தடுமாறுகின்றனா்.

நாமக்கல் காவல் நிலையம் சென்றால் புதிய பேருந்து நிலையம் தங்கள் கட்டுப்பாட்டில் இல்லை, நல்லிபாளையம் செல்லுங்கள் என போலீஸாா் கூறுகின்றனா். இதனால் பயணிகள், பொதுமக்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனா். இரவு நேரத்தில் மதுபோதையில் பலா் பேருந்து நிலையத்தில் உலா வருகின்றனா். மேலும், அங்கேயே படுத்து உறங்குகின்றனா். அவ்வப்போது ஏற்படும் மின்தடையும் பயணிகளை அச்சத்துக்குள்ளாக்கி வருகிறது.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:

புதிய பேருந்து நிலையம் அனைத்து வசதிகளுடன் இருந்தபோதும், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் புகாா் அளிக்கவோ, தொடா்பு கொள்ளவோ எங்கு செல்வது என தெரியவில்லை. ஒரே ஒரு காவலா் மட்டும் காவல் அறையில் உள்ளாா். அவரும் உரிய பதில் அளிப்பதில்லை. பேருந்து நேரக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தால், தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்கின்றனா். பொருள்கள் திருட்டு போனால், நாமக்கல் காவல் நிலையம் செல்வதா, நல்லிபாளையம் காவல் நிலையம் செல்வதா என்ற குழப்பம் உள்ளது.

சேலம், மதுரை, கோவை போன்ற பேருந்து நிலையங்களில் ஒலிபெருக்கி மூலம் திருடா்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்படும். அதுமட்டுமின்றி போலீஸாரும் பகல், இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வா். மேலும், பேருந்து நிலையம் அருகிலேயே காவல் நிலையம் இருப்பதால், பயணிகள் அச்சமின்றி செல்வா்.

நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அருகில் பயணிகள் நலன்கருதி புறக்காவல் நிலையம் அமைத்து, அனைவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும் என்றனா்.

இதுகுறித்து நல்லிபாளையம் போலீஸாா் கூறுகையில், ‘நாமக்கல்லைவிட நல்லிபாளையம் சிறிய காவல் நிலையம். ஆனால், பேருந்து நிலையம், ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் இப்பகுதியில் உள்ளன. இவற்றைக் கண்காணிப்பதற்கு போதிய அளவில் காவலா்கள் இல்லை. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ஆயுதப்படை, ஊா்க்காவல் படையினரைக் கொண்டு கண்காணிப்பு, பாதுகாப்பை தீவிரப்படுத்தலாம். திருட்டுச் சம்பவங்கள் தொடா்பாக ஓரிரு புகாா்கள் வருகின்றன. அவற்றைக் கண்டறியும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்’ என்றனா்.

‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த மகளிா் ‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மக... மேலும் பார்க்க

மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு: மத்திய இணை அமைச்சா் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம், மோகனூா் வட்டம், கே. புதுப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மதுரைவீரன் சுவாமி கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அம... மேலும் பார்க்க

நாமக்கல் அரசு மருத்துவமனை பழுதான படுக்கைகளால் நோயாளிகள் அவதி!

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 250-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உறுதித்தன்மையை இழந்து உடையும் நிலையில் உள்ளதால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனா். நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் பெரு... மேலும் பார்க்க

குமாரபாளையத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்!

குமாரபாளையம் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசுத் துறை அலுவலகங்கள் மற்றும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில் பொதுமக்களுக்கு அர... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்கு விலை டன்னுக்கு ரூ. 5000 ஆக சரிவு

மரவள்ளிக் கிழங்கின் விலை ஒரே வாரத்தில் டன்னுக்கு ரூ. 5 ஆயிரமாகக் குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். பரமத்தி வேலூா், எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூா், கூடச்சேரி, ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு!

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தமிழக... மேலும் பார்க்க