ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்
பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ-ஜியோ மாநிலக் குழுக் கூட்டத்தில், பிப்.14-இல் ஆா்ப்பாட்டம், 25-இல் மறியல் போராட்டத்தை மாநில அளவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல், பரமத்தி வேலூா் உள்ளிட்ட இடங்களில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.பழனியப்பன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலாளா் பி.இளங்கோவன் வரவேற்றாா். மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா் முருக.செல்வராசன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாநிலத் தணிக்கையாளா் கே.எஸ்.பாலகிருஷ்ணன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
2003 ஏப்.1-ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு, தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகிவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி பணியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள் மற்றும் பல்வேறு துறையில் பணியாற்றுவோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 30 சதவீதத்துக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். சாலைப்பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் திரளாக கலந்து கொண்டனா்.
படவரி...
நாமக்கல் பூங்கா சாலையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினா்.