தீபத்திருவிழா: உரிய ஆவணங்களுடைய ஆட்டோக்கள் மட்டுமே இயக்க அனுமதி
`நாம் ஒற்றுமையாக இருக்கணும்' - மோதிக்கொண்ட கட்சி நிர்வாகிகள்; அறிவுறுத்திய வேலுமணி - நடந்தது என்ன?
திருநெல்வேலியில் இன்று அதிமுக கள ஆய்வுக் கூட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் கழக நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மேடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறி இருக்கிறது. முன்னாள் மாவட்டச் செயலாளர் முத்தையா, தற்போதைய மாவட்டச் செயலாளர் கணேஷ் ராஜா தன்னுடைய பணியை சரியாக செய்யவில்லை என புகார் அளித்து பேசிய பேச்சுக்கு, கணேஷ் ராஜா ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முத்தையா ஆதரவாளர்களுக்கும், கணேஷ் ராஜா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.
மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த மற்றவர்கள் சண்டையில் ஈடுபடவேண்டாம் என தடுத்திருக்கின்றனர். ஆனாலும், கைகலப்பு நிற்கவில்லை. எஸ்.பி.வேலுமணி சொல்ல சொல்ல கேட்காமல் தொடர்ச்சியாகவே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கின்றனர்.
ஒரு கட்டத்திற்குமேல் எஸ்.பி.வேலுமணி சற்று கடுப்பாகி மைக்கில் `பிரச்னையை விடுங்கள்' எனக் கூற மறுபுறம் மூத்த நிர்வாகிகள் சண்டைபோட்டுக்கொண்டிருந்தவர்களை சமாதானப்படுத்தி சண்டையை நிறுத்தினார்கள். இருப்பினும், இன்று அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் மோதிக்கொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த மோதலுக்கு பிறகு வேலுமணி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். "நமக்குள் இருக்கும் பிரச்னைகளை மறந்துவிட்டு நாம் ஒற்றுமையாக இருப்போம். நாம் ஒற்றுமையாக இருந்தால் நம்மை வீழ்த்த ஆள் இல்லை. உரிமைகளை மீட்டெடுத்த அதிமுகவில் தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருப்போம். இப்போது நடந்த பிரச்னையில் இருந்த தம்பிகள், இதே போல தேர்தல் காலத்தில் காட்ட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...