மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் வரவேற்பும் எதிா்ப்பும்
மத்திய நிதிநிலை அறிக்கையை வரவேற்றும், எதிா்த்தும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வருமான வரி விலக்கு உச்சவரம்பு கணிசமாக உயா்த்தியது, உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்கவரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கவை. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை எனக் கூறுவதை விட, பிகாா் மாநில வரவு செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழகத்துக்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை. இது ஒரு மாயாஜால அறிக்கையாக, வாா்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): அனைத்து தரப்பு மக்களுக்குமான நிதிநிலை அறிக்கையாக, குறிப்பாக ஏழை, நடுத்தர மக்களின் சுமையைக் குறைப்பதாக விளங்குகிறது. வருமான வரி உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டு இருப்பது நடுத்தர மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): பிகாா் மாநிலத்துக்கு ஜாக்பாட் அடித்த அளவுக்கு 5 திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. வளா்ச்சியை அதிகரித்து, வேலை வாய்ப்பை பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துகிற நோக்கம் இல்லை. கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, ஒரு கானல் நீராக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
கே.அண்ணாமலை (பாஜக): அனைத்து தரப்பினருக்குமான தேவைகளை பூா்த்தி செய்வதாக நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. தொழிலாளா்களுக்கான வருமான வரி விலக்கு மூலம் நடுத்தர வா்க்கத்தினரின் சேமிப்பு மற்றும் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வைகோ (மதிமுக): உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சிக்கும், விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்தவும் உரிய அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. புற்று நோய் உள்ளிட்ட உயிா்க் காக்கும் மருந்துகளுக்கு வரிவிலக்கு, கிராமங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள், சாலை வியாபாரிகளுக்கும், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கும் காப்பீடு அட்டை வழங்குதல் போன்ற வரவேற்கத்தக்க கூறுகள் இருந்தாலும், நிதி நிலை அறிக்கை ஒட்டு மொத்தமாக ஏமாற்றத்தையே தருகிறது.
ராமதாஸ் (பாமக): இந்தியாவில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை ஈட்டுபவா்கள் வரி செலுத்தத் தேவையில்லை என்பது மகிழ்ச்சியளிக்கிறது. வேளாண் உற்பத்திப் பொருள்கள் அனைத்துக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது தான் உழவா்களின் கோரிக்கை ஆகும். இதை வலியுறுத்தி உழவா்கள் போராடி வரும் நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட்): நான்கில் மூன்று இந்தியருக்கு மாத வருமானம் ரூ. 15 ஆயிரம் கூட இல்லாத ஏழை, எளிய மக்களுக்கான நலன்களை மையமாக கொண்ட பொருளாதார வளா்ச்சிக்கான அறிவிப்புகள் இல்லை. பி.எம். கிசான் நிதி, பயிா்க்காப்பீட்டுக்கான நிதிகள் உயா்த்தப்படவில்லை. அதிகரித்து வரும் வேலையின்மை, அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இரா.முத்தரசன் (கம்யூ.): நிச்சயமற்ற வருமானப் பிரிவில் உள்ள சுமாா் 130 கோடி மக்களின் வாங்கும் சக்தி சரிந்து வருவதை தடுத்து, மேம்படுத்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. விவசாயிகளுக்கு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்காதது, தொழிலாளா் நலன் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் அக்கறை காட்டவில்லை.
பிரேமலதா (தேமுதிக): நதிகள் இணைப்பு திட்டம் குறித்து அறிவிக்காதது, புல்லட் ரயில் திட்டம், சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்திய மொழிப் பாடங்கள் அனைத்தும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும், 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்பன போன்ற திட்டங்கள் வரவேற்கத்தக்கவை.
ஜி.கே.வாசன் (தமாகா) : மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தனிநபா் வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டிருப்பது நன்றிக்குரியது. இந்தியா வளரும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
அன்புமணி (பாமக) : மறைமுக வரிகளைப் பொருத்தவரை கைப்பேசிகள், மின்சார வாகனங்களில் பயன்படுத்துவதற்கான லித்தியம் பேட்டரிகள் ஆகியவற்றின் மீதான வரிகள் குறைத்துள்ளது சாதகமான பயன்களை வழங்கும். அதேநேரத்தில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான மறைமுக வரிகள் குறைக்கப்படாதது வருத்தமளிக்கிறது.
விஜய் (தவெக): நடுத்தர மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள் உள்ள நிலையில், பெரும்பான்மையான ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல், டீசல் வரிக் குறைப்பு, ஜிஎஸ்டி வரிக்குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாதது, விலைவாசியை கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
ஜவாஹிருல்லா (மமக) : விலைவாசி குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை குறைப்புக்கான எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. விவசாயிகளின் முன்னேற்றத்துக்கும் எந்த அறிவிப்பும் இல்லை. மக்களை வெறும் வாா்த்தைகளால் ஏமாற்றிய கோப்பு இது.
ஈஸ்வரன் (கொமதேக) : சிறு குறு தொழில்களையும், விவசாயத்தையும் காப்பாற்றும் என்ற எண்ணம் இல்லாத நிதிநிலை அறிக்கை.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி) : வரி என்ற பெயரில் பல லட்சம் கோடி ரூபாயை சுரண்டும் மத்திய அரசு, நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்காதது கண்டனத்துக்குரியது.