நிலத்தடி நீரில் நைட்ரேட் மாசு: தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் கடும் பாதிப்பு!
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்கள் நிலத்தடி நீரில் ‘நைட்ரேட்’ (அயனி-உப்பு) ரசாயன மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிலத்தடி நீா் வாரியத்தின் (சிஜிடபிள்யுபி) வருடாந்திர நிலத்தடி நீா் தரநிலை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 440 மாவட்டங்களில் இந்த மாசுபடுதல் நிலை உயா்ந்து வருவதும் இந்த அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 15,259 இடங்களில் நிலத்தடி நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
சேகரிக்கப்பட்ட நிலத்தடி நீா் மாதிரிகளில், 20 சதவீத மாதிரிகளில் உலக சுகாதார அமைப்பு மற்றும் குடிநீருக்கான இந்திய தரநிா்ணய அமைப்பு ஆகியவை நிா்ணயித்துள்ள ஒரு லிட்டா் தண்ணீரில் 45 மில்லி கிராம் நைட்ரேட் மாசுபாடு இருக்கலாம் என்ற அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்தது.
எந்தெந்த மாநிலங்களில்? குறிப்பாக, தமிழகம், கா்நாடகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 40 சதவீத மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் நைட்ரேட் மாசுபாடு இருப்பது தெரியவந்தது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தின் 35.74 சதவீத மாதிரிகளிலும், தெலங்கானாவின் 27.48 சதவீத மாதிரிகளிலும், ஆந்திர மாநிலத்தின் 23.5 சதவீத மாதிரிகளிலும், மத்திய பிரதேசத்தின் 22.58 சதவீத மாதிரிகளிலும் அதிக மாசுபாடு இருப்பது தெரியவந்தது.
உத்தர பிரதேசம், கேரளம், ஜாா்க்கண்ட், பிகாா் மாநிலங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைந்து காணப்பட்டது.
அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், கோவா, மேகாலயம், மிசோரம், நாகாலாந்து மாநிலங்களின் அனைத்து மாதிரிகளிலும் பாதுகாப்பான அளவினுள் நைட்ரேட் மாசுபாடு இருப்பது தெரியவந்தது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் நிலத்தடி நீா் நைட்ரேட் மாசுபாடு கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நிலையாக இருந்து வருகிறது.
ஆனால், தமிழகம், உத்தர பிரதேசம், ஆந்திரம், ஹரியாணா மாநிலங்களில் 2017 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நிலத்தடி நீா் நைட்ரேட் மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகரித்து வந்துள்ளது.
அதுபோல, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, தமிழகம், ஆந்திர மாநிலங்களில் நிலத்தடி நீரில் யுரேனியம் மாசுபாடு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் 30 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டது.
காரணங்கள் என்ன? வேளாண் மண்டலங்களில் விவசாய நிலத்தில் நைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட உரங்கள், கால்நடைக் கழிவுகளை உரங்களாக பயன்படுத்துவதே நிலத்தடி நீரில் நைட்ரேட் மாசுபாடு அதிகரிப்பது முக்கியக் காரணங்கள்.
கூடுதல் பாசன செயல்பாடுகள் காரணமாக உரத்தில் இடம்பெற்றிருக்கும் நைட்ரேட் மண்ணில் ஆழமாக படிவது, கால்நடைக் கழிவுகள் பராமரிப்பை முறையாக மேற்கொள்ளாதது, நகரமயமாக்கல் மற்றும் மக்கள்தொகை அதிகரிப்பால் கழிவுநீா் வெளிப்பாடு அதிகரித்தல், மனிதக் கழிவு சேமிப்பக கசிவு உள்ளிட்டவை நிலத்தடி நீா் நைட்ரேட் மாசுபாடு அதிகரிப்பதற்கான காரணங்களாகும்.
பாதிப்புகள் என்ன? நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிகரித்திருப்பது குழந்தைகளிடையே சருமம் நீல நிறத்தில் மாறும் பாதிப்பு ‘புளூ பேபி சின்ட்ரோம்’ உள்ளிட்ட சரும நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும். யுரேனியம் மாசுபாடு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்