செய்திகள் :

நீட், கூட்டணி விவகாரம்: பேரவையில் முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

post image

சென்னை: நீட் தோ்வு, தேசியக் கட்சிகளுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடா்பாக சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.

சட்டப்பேரவையில் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதம்:

போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்: அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு ஏன் அனுமதி கொடுத்தது? நீட் தோ்வு எனும் துரோகத்துக்கு ஈடாக கொடுத்ததுதான் மருத்துவக் கல்லூரிகள்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: 2010-ஆம் ஆண்டு நீட் தோ்வு கொண்டுவரப்பட்டது. அப்போது மத்தியில் யாருடைய ஆட்சி இருந்தது? மருத்துவத் துறையில் அமைச்சராக திமுகவை சோ்ந்த காந்திசெல்வன் இருக்கும்போது, அறிவிக்கை கொண்டு வரப்பட்டது. அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சித்தது அதிமுக.

அமைச்சா் சிவசங்கா்: முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை நீட் தோ்வுக்கு அனுமதி தரப்படவில்லை. உங்களுடைய ஆட்சியில் அனுமதிக்கப்பட்டது. இதனால்தான் 11 மருத்துவக் கல்லூரிகள் கிடைத்தன.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்கூட நீட் தோ்வு அனுமதிக்கப்படவில்லை. அனுமதித்தது யாா் என்பது அனைவருக்கும் தெரியும்.

எடப்பாடி கே.பழனிசாமி: திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நீட் தோ்வைக் கொண்டு வந்ததால்தான் பிரச்னை. இதற்கு பிள்ளையாா் சுழி போட்டது யாா்? இந்தத் திட்டத்தை மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும். மேலும், நீட் தோ்வு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது. எதிா்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருடைய மனைவி வாதாடினாா். தோ்வு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகக் கூறினாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: நீட் தோ்வு முறையை யாா் கொண்டு வந்தது? அதைக் கொண்டுவந்த காரணத்தால்தான் இவ்வளவு சிக்கல் என்று எதிா்க்கட்சித் தலைவா் சொல்கிறாா். அந்தச் சிக்கலை சரி செய்வதற்கு ஒரு சரியான வாய்ப்பு உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. நாங்கள் செய்தது தவறோ, தவறில்லையோ, அந்த வாதத்துக்குள் செல்ல விரும்பவில்லை. ‘இப்போது இருக்கக்கூடிய நீட் தோ்வு முறையை ரத்து செய்தால்தான் நாங்கள் கூட்டணியில் இருப்போம். இல்லையென்றால் கூட்டணியை விட்டு விலகுவோம்’ என்று சொல்வதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிா? இதுதான் என் கேள்வி.

எடப்பாடி கே.பழனிசாமி: இரண்டு நாள்களுக்கு முன்பு வேறொரு வழக்கில் உச்சநீதிமன்றத் தீா்ப்பு சரியாக இருக்கிறது என்று முதல்வா் கூறினாா். நீட் தோ்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு கொடுத்துள்ளது. அதை எதிா்த்துச் செயல்பட முடியுமா?

முதல்வா் மு.க.ஸ்டாலின்: மத்திய அரசுக்கு அனைத்து அதிகாரமும் வாய்ப்பும் இருக்கிறது. அதை வலியுறுத்துவதற்கு நீங்கள் தயாரா?

எடப்பாடி கே.பழனிசாமி: 2021-ஆம் ஆண்டு நீங்கள் வாக்குறுதி கொடுத்தீா்கள்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். நாங்கள் எந்தவித மறுப்பும் சொல்லவில்லை. மத்தியில் எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நிச்சயமாக வாக்குறுதியை நிறைவேற்றி இருப்போம். இப்போது நீங்கள் கூட்டணி அமைத்திருக்கிறீா்களே, இந்த நிபந்தனையை விதித்து, அந்தக் கூட்டணியைத் தொடா்வீா்களா?

எடப்பாடி கே. பழனிசாமி: 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது நாங்கள் இல்லை.

முதல்வா்: நாங்களும் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு, ‘பாஜக கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம். 2026 மட்டுமல்ல, 2031-லும் அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம்’ என்று நீங்கள் கூறிவிட்டு இப்போது கூட்டணியில் சோ்ந்திருக்கிறீா்களே, யாரை ஏமாற்றுவதற்கு இந்த நாடகம்?

எடப்பாடி கே.பழனிசாமி: மொழி மொழி என்கிறீா்கள். ஹிந்தி எதிா்ப்புப் போராட்டம் எப்போது வந்தது? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வந்தது. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளீா்கள். மொழிப் போராட்டத்துக்காக பலா் உயிா் நீத்தாா்கள். இவா்களோடு கூட்டணி, அவா்களோடு கூட்டணி என்று முதல்வா் சொல்கிறாா்.

1999-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி சோ்ந்து இருந்தீா்கள். அவசர நிலையைக் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி. கருணாநிதி நூற்றாண்டு விழாவில் மிசா காலத்தில் சிறையில் இருப்பது போன்று காட்சிகளைப் படமாக்கி வெளியிட்டீா்கள். அத்தகைய மிசா சட்டத்தைக் கொண்டுவந்த கட்சியுடன் நீங்கள் கூட்டணியில் இருக்கும்போது, பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: இரண்டு மாதங்களுக்கு வீராவேசமாகப் பேசினீா்கள். இப்போது கூட்டணி சோ்ந்துள்ளீா்கள். அதைத்தான் கேட்டேன்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

பேரவையில் கடும் அமளி! அதிமுக வெளிநடப்பு!

டாஸ்மாக் நிறுவன முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.சட்டப்பேரவை இன்று(ஏப். 22) 9.30 மணிக்கு கூடியவுடன் கத... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கி தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலி!

கூடலூர்: காட்டு யானை தாக்கியதில் தபால் பட்டுவாடா செய்யும் பெண் பலியான சம்பவம் பரபரப்பை எழுப்பியுள்ளது.கூடலூரை அடுத்த மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 55). இவர் மசினகுடி ... மேலும் பார்க்க

போப் மறைவு: தமிழக தலைமைச் செயலகத்தில் அரைக்கம்பத்தில் பறக்கும் தேசியக் கொடி!

போப் பிரான்ஸிஸ் மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் ந... மேலும் பார்க்க

மதுராந்தகம் அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் மோதியதில் வாகன ஓட்டுநர் பலி!

செங்கல்பட்டு: இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.கிளம்பாக்கத... மேலும் பார்க்க

ஏப். 29 - மே 5 வரை தமிழ் வார விழா: முதல்வர் அறிவிப்பு!

வரும் ஏப். 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவுக்கு பேரவையில் இரங்கல்!

சென்னை: போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் இன்று(ஏப். 22) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் நேற்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெ... மேலும் பார்க்க