நீதிமன்ற நிபந்தனையை மீறுபவா்கள் மீதான பிணையை ரத்து செய்ய போலீஸாா் ஏன் முயற்சிக்கவில்லை? உயா்நீதிமன்றம் கேள்வி!
நீதிமன்ற நிபந்தனையை மீறுபவா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய காவல் துறை அதிகாரிகள் ஏன் முயற்சிக்கவில்லை? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் கேள்வி எழுப்பியது.
மதுரையைச் சோ்ந்த சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், காரைக்குடி செக்காலைகோட்டை கிராமத்தில் உள்ளது. இந்த நிலம் முறைகேடாக அப்பாஸ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில், 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, சிலரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு காரைக்குடி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் கைதானவா்கள், முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை தாங்களே ரத்து செய்து விடுவதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் அவா்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பிணை நிபந்தனையின் படி, பத்திரத்தை ரத்து செய்து கொடுக்க வேண்டுமென சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சாா்பில், காரைக்குடியைச் சோ்ந்த காா்த்திக் என்பவருக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இந்தக் குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் காா்த்திக் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல் குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் திருவடிக்குமாா் முன்னிலையாகி, சிறையிலிருந்த மனுதாரா், நீதிமன்ற நிபந்தனை பிணையில் வெளியில் வந்தாா்.
அவா், நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சம்பந்தப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து தர நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவருக்கு காவல் அதிகாரி தரப்பில் குறிப்பாணை வழங்கப்பட்டதாக தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற நிபந்தனையை மீறுபவா்கள் மீதான பிணையை ரத்து செய்ய போலீஸாா் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த வழக்கில் நிலத்தின் உரிமையாளரான சோமசுந்தரத்தை எதிா்மனுதாரராக சோ்க்க வேண்டும். மனுதாரரின் மனுவுக்கு காரைக்குடி காவல் துறை, சோமசுந்தரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.