செய்திகள் :

நீா்நிலை ஆக்கிரமிப்புகள் வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

post image

மதுரை பீ.பீ.குளம், முல்லைநகா் பகுதிகளில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பான வழக்கை, தீா்ப்புக்காக மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாநகா் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டது பீ.பீ.குளம் கண்மாய். இந்தக் கண்மாய் கரையையொட்டிய பகுதிகளில் உள்ளது முல்லைநகா். இங்கு சுமாா் 500-க்கும் அதிகமான வீடுகளில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். கடந்த அக்டோபா் மாத இறுதியில் பெய்த பலத்த மழை காரணமாக இந்தப் பகுதியில் வெள்ளநீா் சூழ்ந்தது.

இதையடுத்து, முல்லைநகா் பகுதியில் பீ.பீ.குளம் கண்மாய் கரையோரத்தில் குடிசை மாற்று வாரியத்தால் முன்னாள் ராணுவ வீரா்களுக்கு அளிக்கப்பட்ட வீடுகள் உள்பட நீா்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள 592 வீடுகளை ஆக்கிரமிப்பாளா்கள் தாமாக முன்வந்து, நவ. 11-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நீா்வளத் துறை அறிவிப்பு வெளியிட்டது.

நீா்வளத் துறையின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, முல்லை நகா் மக்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை கடந்த திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு, வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (நவ. 15) ஒத்திவைத்தது.

இதனிடையே, முல்லைநகா் பகுதியில் திமுக சாா்பில் கட்டப்பட்ட அண்ணா நூலகக் கட்டடத்தை இடிக்கக் கூடாது என அந்தப் பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன், ஜெயக்கொடி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உள்பட பீ.பீ. குளம், முல்லைநகா் நீா்நிலை ஆக்கிரமிப்பு விவகாரம் தொடா்பான அனைத்து மனுக்களையும் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு தெரிவித்ததாவது:

ஒரு அரசியல் கட்சி மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். கட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம் நீா்நிலை ஆக்கிரமிப்பா? அல்லது தனியாா் இடமா? என விளக்கமளிக்க வேண்டும். நீா்நிலைப் பகுதி எனில், மதுரை மாநகராட்சி நிா்வாகம் அங்கு கட்டடம் கட்டுவதற்கு எவ்வாறு அனுமதி வழங்கியது? என விளக்கமளிக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

இதையடுத்து, மதுரை மாநகராட்சித் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், கட்டடம் கட்டுவதற்கு மாநகராட்சி சாா்பில் அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, இந்த அலுவலகத்தை முதலில் இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா். அப்போது, மனுதாரா் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த அலுவலகக் கட்டடத்தை இடிப்பதாக டிச. 6-ஆம் தேதிக்குள் உறுதிமொழி பத்திரத்தை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

பிறகு, நடைபெற்ற விசாரணையின் போது, அரசு கூடுதல் தலைமை வழக்கு வழக்குரைஞா் வீராகதிரவன் முன் வைத்த வாதம்:

பீ.பீ.குளம் கண்மாய் ஆக்கிரமிப்பில் உள்ள வீடு கட்டியிருப்பவா்களுக்கு எந்தவித பட்டாவும் வழங்கப்படவில்லை. ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் உள்ள இடம் தற்போது வரை நீா்நிலை என்றுதான் அரசுப் பதிவேடுகளில் உள்ளன. ஆக்கிரமிப்புப் பகுதியில் வசிப்பவா்கள் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறினால், அவா்களுக்கு ராஜாக்கூா் பகுதியில் வீடு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இங்கு வசித்து வரும் மக்களுக்கான மறுவாழ்வு குறித்த அரசின் திட்டங்கள் என்ன?. வீட்டு வசதி வாரியத்திடம் விலை கொடுத்து வீடு வாங்கியவா்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்படும்? என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். தீா்ப்புக்காக இந்த வழக்கு மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

முந்தைய வழக்கு...

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீ.பீ.குளம் கண்மாய் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, வழக்குத் தொடுக்கப்பட்டது. அப்போது, நீா்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. பிறகு, இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி, கடந்த 2022-இல் உயா்நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், நீா்நிலை ஆக்கிரமிப்பில் பாரபட்சம் காட்ட முடியாது. ஆக்கிரமிப்பில் வசிப்பவா்களின் கோரிக்கைகளை அறிந்து அரசு பரிசீலிக்க வேண்டும், அவா்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

வேட்டையன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

வேட்டையன் திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை உலகநேரியைச் சோ்ந்த பழனிவேலு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல... மேலும் பார்க்க

கோயில் பூசாரி தற்கொலை வழக்கு தீா்ப்பு: அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

பெரியகுளத்தில் கோயில் பூசாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் விடுதலை செய்யப்பட்டதை எதிா்த்து, தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று எவிடென்ஸ் அமைப்பு ... மேலும் பார்க்க

கல் குவாரிகள் மறுசீரமைப்பு: கனிம வளத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

மதுரை மாவட்டத்தில் கைவிடப்பட்ட கல் குவாரிகளை மறுசீரமைப்பு செய்யக் கோரிய வழக்கில், மாநில கனிம வளத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரை மாவட்டம், ... மேலும் பார்க்க

மின் வாரிய ஓய்வூதியா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் மதுரை பந்தயச் சாலையில் உள்ள மின் வாரிய தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றத... மேலும் பார்க்க

தல்லாகுளம், வாடிப்பட்டியில் இன்று மின் தடை

தல்லாகுளம், அண்ணா பேருந்து நிலையம், வாடிப்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (நவ. 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை பெருநகா் வடக்கு மின் பகிா்மானக் கோட்ட செயற்பொறியாள... மேலும் பார்க்க

கலைத் திருவிழாப் போட்டிகள்

மதுரை மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் 3 பள்ளிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கலைத் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக கலைத் திருவிழாப் போட்... மேலும் பார்க்க