Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
வேட்டையன் திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு
வேட்டையன் திரைப்படத்துக்குத் தடை கோரிய வழக்கை முடித்துவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை உலகநேரியைச் சோ்ந்த பழனிவேலு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
நடிகா் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படத்துக்கான முன்னோட்டக் காட்சிகள் (டீசா்) கடந்த செப். 20-ஆம் தேதி வெளியானது. அதில் சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டை(என்கவுன்ட்டா்) பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை உருவாக்கும் வகையில் வசனம் இடம் பெற்றிருந்தது.
இதை நீக்கக் கோரி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
எனவே, வேட்டையன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சட்டவிரோத துப்பாக்கிச்சூடு தொடா்பான வசனங்களை நீக்க வேண்டும் அல்லது இந்த வசனம் வரும் போது, சப்தத்தை நிறுத்த உத்தரவிட வேண்டும். அதுவரை வேட்டையன் திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், திரைப்படத்தை முழுவதும் பாா்த்த பிறகு, சட்டவிரோத துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்துவதாக திரைப்படம் அமையவில்லை எனத் தெரிவித்தாா்.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.