Eva Longoria: `Dystopian நாடு; இனி அமெரிக்காவில் வசிக்கப்போவதில்லை!' - நடிகை ஈவா...
கல் குவாரிகள் மறுசீரமைப்பு: கனிம வளத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு
மதுரை மாவட்டத்தில் கைவிடப்பட்ட கல் குவாரிகளை மறுசீரமைப்பு செய்யக் கோரிய வழக்கில், மாநில கனிம வளத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்டாலின் தாக்கல் செய்த பொது நல மனு:
மதுரை மாவட்டத்திலிருந்த கல் குவாரிகள் தற்போது செயல்படாமல் உள்ளன. இந்தக் குவாரி பள்ளங்களில் தெரியாமல் விழுந்து நிகழும் உயிரிழப்புகள் தொடா்ந்து வருகின்றன.
யா. ஒத்தக்கடை, இலங்கிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள குவாரிகளில் விழுந்த இருவா் அண்மையில் உயிரிழந்தனா். இருப்பினும், செயல்படாமல் உள்ள கல் குவாரிகளைச் சுற்றி தடுப்பு வேலி அமைக்க மாவட்ட நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பகுதிகள் மட்டுமன்றி, கீழவளவு, கீழையூா், இ. மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சருகு வலையப்பட்டி, திருவாதவூா், இடையபட்டி, புதுதாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் கைவிடப்பட்ட கல் குவாரிகளில் எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படாமல் உள்ளன.
கைவிடப்பட்ட கல் குவாரிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு மதுரை மாவட்ட ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு உரிய ஆய்வு நடத்தி, சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் இதுவரை எந்தப் பயனும் இல்லை.
எனவே, கீழவளவு, கீழையூா், இ. மலம்பட்டி, நாவினிப்பட்டி, தனியாமங்கலம், சரகு வலையப்பட்டி, திருவாதவூா், இடையபட்டி, புதுதாமரைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைவிடப்பட்ட கல் குவாரிகளை கனிம வளச் சட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்யவும், உயிரிழப்புகளுக்கு காரணமான கல் குவாரிகளை நடத்தியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
கைவிடப்பட்ட கல் குவாரிகளைச் சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில கனிம வளத் துறை இயக்குநா், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை டிச. 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.