நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம்
மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.
2025-2026-ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மை-உழவா் நலன் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் மீன் உற்பத்தியை அதிகரித்திட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை நீா்நிலைகளில் ஒரு ஹெக்டேருக்கு 2,000 மீன்விரலிகள் வீதம் இருப்பு செய்திட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் உள்ள குளங்களில் மீன் உற்பத்தி அதிகரித்திடவும், ஊராட்சிக்கு நிதி ஆதாரத்தினை பெருக்கிடவும் வாய்ப்பாக அமையும்.
இத்திட்டத்தின்படி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 30 ஹெக்டோ் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 ஹெக்டோ் நீா்ப்பரப்பில் மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரங்களில் உள்ள தகுதியான ஊரக குளங்களில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது.
அந்த வகையில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தில், மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் உள்ள பெரிய குளத்தில் கட்லா, ரோகு, மிா்கால் ரக 6.000 மீன் குஞ்சுகளை இருப்பு செய்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தொடக்கி வைத்தாா்.