ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயிண்டன் டி காக்! மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்...
நெய் விலை குறைப்பு; ஆனால், தள்ளுபடி ரத்து! மற்றவை விலை குறையாதா? ஆவின் அமைதி!
ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பால் பொருள்களின் விலை திங்கள்கிழமை குறைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5%, 18% என்ற இரு அடுக்குகளில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட பால் வகைகள், தயிர், லஸ்ஸி, பன்னீர் உள்ளிட்ட பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெண்ணெய், நெய், சீஸ், ஐஸ் கிரீம் போன்ற கொழுப்பு அதிகமுள்ள பால் வகைப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகக் குறைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அமுல், நந்தினி போன்ற பிற மாநிலங்களின் பொதுத்துறை நிறுவனங்கள், மதர் டெய்ரி உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் தங்கள் பொருள்களின் விலையைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருந்தன.
ஆனால், தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனமான ஆவின், விலைக் குறைப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிடாதது குறித்து கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், ஆவின் நிறுவனமும் இன்று பால் பொருள்களின் விலையைக் குறைத்து புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஒரு லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ. 700 இல் இருந்து ரூ. 660 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பன்னீர் விலை (500 கிராம்) ரூ. 300 இல் இருந்து ரூ. 275 ஆகவும், பதப்படுத்தப்பட்ட பால் (யுஎச்டி பால்) 150 மிலி ரூ. 12 இல் இருந்து ரூ. 10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி குறைப்பின்படி, 5 லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ. 3,600 இல் இருந்து ரூ. 3,250 ஆக குறைக்கப்பட்ட நிலையில், இந்த வகை பொருளுக்கு ஆவின் அளித்து வந்த ரூ. 50 தள்ளுபடியை இன்றுமுதல் ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், முன்பு அளிக்கப்பட்ட தள்ளுபடியை சேர்ந்து தற்போது 5 லிட்டர் பாட்டில் நெய்யின் விலை ரூ. 3,300 -க்கு விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், 15 லிட்டர் நெய் டின்னுக்கு அளிக்கப்பட்டு வந்த ரூ. 175 தள்ளுபடியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 5 சதவிகித ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கப்பட்ட தயிர், லஸ்ஸி, மோர் உள்ளிட்ட பொருள்களின் விலையை ஆவின் நிறுவனம் குறைக்கவில்லை.
இதேபோல், 12 சதவிகித ஜிஎஸ்டியில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்ட வெண்ணெய், சீஸ், ஐஸ் கிரீம் போன்ற பொருள்களின் விலை குறைப்பு குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.
ஆனால், கர்நாடக பொதுத் துறை நிறுவனமான நந்தினி, தயிர், மோர், வெண்ணெய், பாதாம் பொடி, சாக்லேட், ஐஸ் கிரீம், பிஸ்கட் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களின் விலையையும் குறைத்துள்ளது.
ஆவின் நிறுவனமும் அடுத்தடுத்து வெண்ணெய், ஐஸ்கிரீம், லஸ்ஸி, மில்க் ஷேக் போன்ற பிற பொருள்களின் விலையையும் குறைத்து அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.