லடாக்: `3 இடியட்ஸ்' -க்கு இன்ஸ்பிரேஷன்; மத்திய அரசின் குற்றச்சாட்டு - யார் இந்த ...
நெல்லை: கோழிகளைத் தூக்கிச் செல்ல முயன்ற சிறுத்தை; தொடர் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்
நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, சிங்கவால் குரங்கு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த விலங்குகள் இரை மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
குறிப்பாக பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், வேம்பையாபுரம், திருப்பதியாபுரம், அகஸ்தியர்புரம், கோட்டைவிளைபட்டி போன்ற இடங்களில் சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் கடித்து இரையாக உண்பதை வாடிக்கையாக்கியுள்ளன.

இது ஒருபுறமிருக்க யானை, காட்டுப்பன்றிகள் விளை நிலங்கள், தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. வன விலங்குகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்தக் கோரி வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் குற்றம் சாட்டுகின்றனர்.
பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பொதிகையடி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். மின்வாரிய ஊழியரான இவர் கோழி, புறா நாய் போன்ற பிராணிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் சங்கரின் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை உறுமல் சத்தத்துடன் கோழிக்கூட்டின் மீது ஏறி கூட்டை வாயால் திறந்து கோழிகளைத் தூக்க முயன்றது. உறுமல் சத்தம் கேட்டு எழுந்த சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாத்திரங்களைத் தட்டி ஓசை எழுப்பினர்.
அந்தச் சத்தம் கேட்ட சிறுத்தை தப்பியோடியது. ஏற்கெனவே இப்பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கரடிகள் குட்டிகளுடன் சுற்றி வருகின்றன. இதில் ஒரு கரடியைக்கூட கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில் தற்போது சிறுத்தை நடமாட்டமும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். நள்ளிரவு நேரத்தில் சுற்றி வந்த கரடி, சிறுத்தைகள் மக்கள் நடமாட்டமுள்ள நேரத்திலும் வலம் வருவதால் பொதுமக்களைத் தாக்கவும் வாய்ப்புள்ளதால் மேலும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால், வனத்துறையினர் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடிப்பதுடன், இரவு நேரங்களிலும் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.