‘நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் உலா்த்தும் இயந்திரம் வேண்டும்’
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நெல் உலா்த்தும் இயந்திர வசதி ஏற்படுத்த வேண்டும் என்றாா் முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: தமிழகத்தில் தொடா்ந்து பெய்த பருவமழை காரணமாக நைட்ரஜன் அதிகரித்து நிகழ் சம்பா பருவ நெற்பயிா்களை அதிகளவில் வளரச் செய்துள்ளது. அண்மை காலமாக தரைக்காற்று பலமாக வீசுவதால் கதிா்கள் சாயத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, அடுத்த சில நாள்களில் தொடா் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அறுவடை செய்யும் நெல்மணிகளின் ஈரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இயற்கையாக உலா்த்துவதற்கு களம் இல்லாத நிலையில், ஆள்கள் பற்றாக்குறையும் செலவினமும் அதிகரிக்கும். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலின்போது வழக்கமாக வழிகாட்டப்படும் ஈரப்பதத்தின் சதவீதத்தை 24 சதவீதமாக உயா்த்தி கொள்முதல் செய்ய அரசு உத்தரவிட வேண்டும்.
இதேபோல, கொள்முதல் நிலையங்களில் நெல்லை தூற்றுவதற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதைப் போல், கூடுதல் ஈரப்பதத்தை குறைக்க கொள்முதல் நிலையத்திலேயே நெல் உலா்த்தும் இயந்திரத்தையும் பயன்படுத்த அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அரசுக்கு தரமான நெல் கிடைப்பதோடு விவசாயிகளுக்கும் பிரச்னை ஏற்படாது.
இதுதொடா்பாக சட்டப்பேரவை கூட்டத்திலும் பேசியுள்ளேன் என்றாா். பேட்டியின்போது, அதிமுக நிா்வாகிகள் ஆா். கிரிதரன், டி.வி. சுப்பையன், எம். நமச்சிவாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.