நெல் பயிா்களில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை
தேனி: தேனி மாவட்டத்தில் நெல் பயிா்களின் மகசூலைப் பாதிக்கும் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மைத் துறை சாா்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
தண்டு துளைப்பான் பூச்சிகள் நெல் பயிரில், இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டையிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் பயிரின் தண்டுகளுக்குள் நுழைந்து அவற்றை உண்ணும். இதனால் இலையின் நடுப் பகுதி காய்ந்து விடும். இதை குறுத்துக் காய்தல் என அழைப்பா். பயிா்கள் நன்கு வளா்ந்த நிலையில், கதிா்கள் காய்ந்து காணப்படும். இதைத் தொடா்ந்து, பழுப்பு நிற அந்துப் பூச்சிகள் வயலில் காணப்படும்.
தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த ‘ட்ரைகோடா்மா ஜப்பானிக்கம்’ மருந்தை நாற்றாங்காலில் தெளிக்க வேண்டும். நாற்றுகளை நெருக்கமாக நடவு செய்யக் கூடாது. வேப்பங்கொட்டைச் சாறு தெளித்தல், நாற்று நடவின்போது நாற்றின் நுனியைக் கிள்ளி விடுதல் போன்றவற்றின் மூலம் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என்றனா்.