நேபாள சிறையில் மோதல்: மூவர் பலி, 15 ஆயிரம் கைதிகள் தப்பியோட்டம்!
நேபாள சிறையில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் கைதிகள் மூவர் உயிரிழந்தனர். மேலும் பல்வேறு சிறைகளிலிருந்தும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கள்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் அரசின் பிற நடவடிக்கைகள் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்தது.
நேபாளம் முழுவதும் ஜெனரல் இசட் குழு தலையிலான அரசு எதிர்ப்பு ஆரப்பாட்டங்களின் ஒரு பகுதியாக வன்முறை வெடித்ததிலிருந்து பாதுகாப்புப் படையினருடனான மோதல்களில் இறந்த கைதிகளின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தொடரும் வன்முறைப் போராட்டம் காரணமாக பிரதமர் கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மாகாணங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை காரணமாக நேபாள ராணுவம் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
வியாழக்கிழமை (செப். 11)ல் காலை நிலவரப்படி மாதேஷ் மாகாணத்தில் உள்ள ராமேச்சாப் மாவட்டத்தில் உள்ள சிறையில் கைதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் மூன்று கைதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கைதிகள் எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்தி வெடிப்பை ஏற்படுத்தி சிறையிலிருந்து வெளியேற முயன்றபோது மோதல் ஏற்பட்டது. கைதிகளில் மூவர் பலியான நிலையில், நிலைமை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
காயமடைந்தவர்கள் ராமேச்சாப் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
செப். 8 வன்முறை வெடித்ததிலிருந்து நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மோதல்கள் மற்றும் தப்பிச் செல்லும் சம்பவங்களும், தீ விபத்துகள், கலவரங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான கைதிகள் தப்பியோடும் சம்பவம் நடைபெற்று வருவதாக ஊடக அறிக்கை தெரிவித்தது.