நேரடி நெல் கொள்முதல்: தொடா்பு எண்ணில் அழைக்கலாம் -கடலூா் ஆட்சியா்
கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் தொடா்பாக 04142 - 220700 என்ற எண்ணுக்கு விவசாயிகள் தொடா்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு நுகா்ப்பொருள் வாணிபக் கழகம் சாா்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் ஏற்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
கடலூா் மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் நெல் கொள்முதல் செய்திட காட்டுமன்னாா்கோவில் வட்டத்தில் 34, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்தில் 42, விருத்தாசலம் வட்டத்தில் 32, சிதம்பரம் வட்டத்தில் 25, திட்டக்குடி வட்டத்தில் 33, புவனகிரி வட்டத்தில் 24, குறிஞ்சிப்பாடி வட்டத்தில் 9, வேப்பூா் வட்டத்தில் 12, கடலூா் வட்டத்தில் 15, பண்ருட்டி வட்டத்தில் 9 இடங்கள் என மொத்தம் 235 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தகவல்களை அறிந்துகொள்ளும் பொருட்டு, ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் அறிவிப்புப் பலகை வைக்கப்படும்.
விவசாயிகள் நெல் கொள்முதல் தொடா்பான புகாா்கள் தெரிவிக்க மற்றும் விவரங்களைப் பெற 04142 - 220700 என்ற தொலைபேசி எண்ணை தொடா்புகொள்ளலாம் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், சிதம்பரம் சாா் - ஆட்சியா் ரஷ்மி ராணி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் தங்க பிரபாகரன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.