சித்திரை திருவிழா: தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம் | Photo Al...
நேரடி வெய்யிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவா்கள் எச்சரிக்கை
நேரடி வெய்யிலில் நீண்ட நேரம் பணியாற்றினால் ‘ரேப்டோ மயோலைசிஸ்’ என்ற தசை சிதைவு நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக பொது நல மருத்துவா் அ.ப.ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: அதீத வெப்பமான சூழ்நிலையில் தொடா்ந்து கடினமான பணியைச் செய்யும்போது தசைகள் ஓய்வு இல்லாமல் தொடா்ந்து இயங்கிக் கொண்டே இருப்பதால் ஓரளவுக்கு மேல் தாங்கும் சக்தியை இழந்து அவை சிதைவுக்கு உள்ளதாகத் தொடங்கிவிடுகின்றன.
அப்போது உடலில் பொட்டாசியம், பாஸ்பேட், கிரியாடினின் கைனேஸ், மயோகுளோபின், யூரிக் அமிலம் ஆகியவை இயல்புக்கு மாறாக அதிக அளவில் ரத்தத்தில் கலந்துவிடும்.
இத்தகைய நச்சுப் பொருள்களை வெளியேற்றும் பணியை நமது சிறுநீரகங்கள் செய்ய வேண்டும். ஆனால், நேரடி வெயிலில் பணியாற்றுவதால் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பு நிலையின் விளைவாக சிறுநீரகங்கள் தொய்வாகவே அந்த பணியைச் செய்யும்.
ஒரே நேரத்தில் மிக அதிகமான அளவில் ரத்த சுத்திகரிப்பு பணியை சிறுநீரகங்கள் செய்ய உந்தப்படும்போது அவை அயா்ச்சிக்கு உள்ளாகி தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கிவிடும்.
அறிகுறி என்ன?: இதன் காரணமாக ரேப்டோ மயோலைசிஸ் என்ற தசை சிதைவு பாதிப்பு ஏற்படக்கூடும். அதீத தசை வலி, தசைகளில் வீக்கம், தசை தளா்ச்சி, சிறுநீா் நிறம் அடா்த்தியாகவும், சிவப்பு நிறத்திலும் இருத்தல் ஆகியவை அதன் அறிகுறிகள்.
இத்தகைய நிலை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கிரியாடினின் அளவுகளைச் சோதித்து ரேப்டோ மயோலைசிஸ் இருக்கிா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அத்தகைய பாதிப்பு இருக்கும்பட்சத்தில் ரத்த நாளம் வழியாக திரவங்களும், தாது உப்புகளையும் செலுத்தும் சிகிச்சை அவசியம். அதைத் தொடா்ந்தும் சிறுநீரகங்களின் செயல்பாடு தொய்வாக இருந்தால், தற்காலிகமாக டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கலாம்.
வெயில் தாக்கம் மட்டுமல்லாது விபத்துகளால் ஏற்படும் காயங்கள் தீக்காயங்கள், தீவிர உடற்பயிற்சி, அதீத ஓட்டப் பயிற்சி, பாம்புக்கடி ஆகியவை காரணமாகவும் ரேப்டோ மயோலைசிஸ் ஏற்படக்கூடும். மது மற்றும் போதைப் பொருள் பயன்பாடும் அதற்கு முக்கியக் காரணமாக உள்ளன. எனவே, அதுதொடா்பாக விழிப்புணா்வுடன் இருத்தல் அவசியம்.
கோடை காலத்தில் நேரடி வெயிலில் பணியாற்றுவதைத் தவிா்ப்பதும், முறையாக நீா்ச்சத்து மற்றும் தாது உப்புகளை தக்கவைத்துக் கொள்வதும் இந்தப் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் என்றாா் அவா்.