Bobby Simha: சென்னையில் கார் விபத்து; 6 வாகனங்கள் சேதம்; போதையில் இருந்த ஓட்டுநர...
நேரு பிளேசில் பெரும் தீ விபத்து: காவல் துறை பறிமுதல் செய்த 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசம்
தில்லியின் நேரு பிளேஸில் உள்ள காவல் துறைக்கு சொந்தமான இடத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், தில்லி போக்குவரத்து காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகியதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: தீ விபத்து தொடா்பாக பிற்பகல் 2.02 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. ஆரம்பத்தில் நாங்கள் ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. மேலும் சில சொத்துகளும் எரிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அணைக்கப்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகியது.
தீயை முழுமையாக அணைக்க மூன்று மணி நேரத்திற்கும் மேலாகியது. மேலதிக விசாரணைக்காக இந்த விஷயம் உடனடியாக போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, குளிரூட்டும் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன என்று அவா் கூறினாா்.
இந்த யாா்டு தில்லி போக்குவரத்து காவல்துறைக்குச் சொந்தமானது. போக்குவரத்து தலைமையக அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையை சரிபாா்த்தனா் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
போக்குவரத்துப் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட விபத்து வாகனங்கள் உள்பட ஏராளமான இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த யாா்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாக தில்லி போக்குவரத்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தீ விபத்து ஏற்பட்டவுடன், அந்தப் பகுதி முழுவதும் அடா்த்தியான புகை மூட்டம் பரவியது. தீ மிகவும் தீவிரமாக இருந்ததால் அது பல வாகனங்களை விரைவாகச் சூழ்ந்தது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.