அரசுக்கு எதிராகப் பேச நடிகர்கள் தயக்கம்: அமலாக்கத் துறைக்குப் பயப்படுகிறார்கள்! ...
``நேற்று வந்த விஜய் சாரைப் பார்த்து உதய் அண்ணா பயப்படுறார்ன்னு சொல்றதை...'' - திவ்யா சத்யராஜ் பேட்டி
சமீபத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யாராஜ் பதிவிட்ட கருத்து, சமூக வலைதளங்கள் எங்கும் பேசுபொருளாகி இருக்கிறது.
அதுவும், “அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பெண்களைத் அவமதிப்பதில்லை. அவர்கள் கோழைகள் அல்ல. அவர்கள் கண்ணியத்துடனும், தரத்துடனும் நடந்து கொள்கிறார்கள். அஜித் ஒருபோதும் தனது ரசிகர்கள் ஆன்லைனில் பெண்களை அச்சுறுத்தவோ அல்லது அவமதிக்கவோ அனுமதிக்க மாட்டார்” என பாராட்டியதோடு,
“பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அல்லது துஷ்பிரயோகங்களைப் ஊக்குவிக்கும் அல்லது அமைதியாக இருக்கும் எந்தவொரு நபரும் உண்மையான தலைவர் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர் என்று நான் நம்புகிறேன்” என விமர்சித்திருப்பது விஜய்யைத்தான் மறைமுகமாக டார்கெட் செய்திருக்கிறார் என்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,
திவ்யா சத்யராஜை தொடர்புகொண்டு திமுகவில் புதிய பொறுப்பு... இன்ஸ்டா அறிக்கை குறித்தெல்லாம் கேள்வி எழுப்பினேன்.
"முதல்வர் அளித்துள்ள தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் பணி, எனக்கான பொறுப்பை இன்னும் கூட்டியிருக்கு. குறிப்பா, என்னை சின்னப் பொண்ணு மாதிரி பார்க்காம ரொம்ப சமமா நடத்துறாங்க. நான் மட்டுமில்ல, திமுகவில் எல்லா பெண்களும் அப்படித்தான் நடத்தப்படுறாங்க. நாங்க நினைச்ச நேரத்துக்கு முதல்வரைப் பார்க்கலாம்; துணை முதல்வரையும் சந்திக்கலாம். ஆனா, விஜய் சாரை அவங்க கட்சியினர் அப்படி அணுகமுடியுமா? அப்படி அணுகினா என்ன நடக்கும்ங்கிறது தெரியும்ல!" - என்று ஆரம்பிக்கும்போதே விஜய் மீது விமர்சன கணைகளுடன் தொடங்குகிறார்.
"பொதுமக்களும் ரசிகர்களும் முதல்ல ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்கணும். விஜய் சாரை விமர்சிக்கிறதுல எனக்கு எந்த உள்நோக்கமும் தனிப்பட்ட காரணங்களும் கிடையாது. அவரோட நடிப்பு, டான்ஸ் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். ஆனா, அவரோட ரசிகர்கள் என்னை உருவகேலி செய்திருக்காங்க. பெண்கள் மீது சமூக வலைதளங்களில் கொடூர தாக்குதலை நிகழ்த்தியிருக்காங்க. ஆனா, அஜித் சார் ரசிகர்கள் அப்படி பண்ணினது கிடையாது. அஜித் சார் பெண்களை மதிக்கிற விதம், அணுகுமுறை எல்லாமே வெரி குட்ன்னுதான் சொல்லணும். அதனால்தான், நான் இன்ஸ்டாவுல போஸ்ட் போட்டிருந்தேன். அது, விஜய் சார் ரசிகர்களுக்காகத்தான்.
நீங்களோ, நானோ அஜித் சாரைப் பார்க்கப்போனா, எழுந்து நின்னு மரியாதை கொடுப்பார். அவங்கக் குடும்பத்திலிருக்க பெண்களை எப்படி மதிக்கிறார்னு ஊருக்கே தெரியும். குறிப்பா, அவரோட அம்மாவையும் மனைவியையும் சூப்பரா பார்த்துகிறார். அவர், எப்படி பெண்களை மதிக்கிறாரோ, அதையே அவரோட ரசிகர்களும் ஃபாலோ பண்றாங்க. ஆனா, விஜய் சார் ஃபேன்ஸ் அப்படி கிடையாது. பெண்களுக்குக் கொலை மிரட்டல் விடுறது, பெண்களை சமமா பாவிக்காம கட்சியிலிருந்து வெளியேற்றுவதுன்னு பெண்களை மதிக்கத் தெரியாதவங்களா இருக்காங்க. வைஷ்ணவிங்கிஙற ஒரு உதாரணமே போதும்.
நான் எல்லா விஜய் சார் ரசிகர்களையும் குற்றம் சொல்லல. ஒரு சிலர் அப்படித்தான் இருக்கிறாங்க. என்னோட அண்ணாவும் விஜய் சார் ஃபேன் தான். அதுக்காகல்லாம், நான் விஜய் சாருக்கு சப்போர்ட் பண்ண முடியாது.
தன்னோட ரசிகர்கள், எந்தத் தவறு செய்தாலும் உடனே கண்டிச்சிடுவார் அஜித் சார். ஆனா, விஜய் சார் கண்டிக்கவும் மாட்டார். சமூக பொறுப்போடும் நடந்துக்கவும் மாட்டார். இதுவரைக்கும் மக்கள் பிரச்னைக்காக எத்தனை முறை குரல் கொடுத்திருக்கார்?
நடிகர் சித்தார்த் எந்த மக்கள் பிரச்சனையா இருந்தாலும் உடனடியா குரல் கொடுப்பார்; களத்தில் நிற்பார். சூர்யா அண்ணா அகரம் ஃபவுண்டேஷன் மூலம் அத்தனை மாணவர்களைப் படிக்கவெச்சுட்டு இருக்கார். இவர்களெல்லாம் மக்களுக்கு உண்மையாவே சேவை செய்திட்டிருக்கும்போது, விஜய் சார் என்ன பண்ணினார்?
சூர்யா அண்ணா அரசியலுக்கு வர்றாருன்னா, அதுக்கான முழு தகுதியும் அவருக்கு இருக்கு. விஜய் சாருக்கு என்ன தகுதி இருக்கு? அவரோட கனவு; ஆசை எல்லாமே முதல்வர் நாற்காலியை நோக்கித்தான் இருக்கு. மக்கள் பிரச்னைகளை நோக்கி அல்ல. சரி அரசியலுக்குத்தான் வந்தாரே, பாராட்டும்படியான திட்டங்கள் ஏதாவது அறிவித்தாரா? அப்படி ஒன்றுமே கிடையாதே?
ஆக மொத்தம், எந்தத் தெளிவுமே இல்லாம அரசியலுக்கு வந்திருக்கார். அரசியலில் அவருக்கு அனுபவமும் இல்லை. அதனாலதான், அவர் அரசியலுக்கு தகுதியற்றவர்ன்னு சொல்றேன்" என்று ஆவேசப்படுபவரிடம்,
"ஆனால், அரசியலில் உதயநிதிக்கும் அனுபவம் இல்லை என்று அதிமுகவினர் விமர்சிக்கிறார்களே?" என்றோம்,
"உதய் அண்ணாவுக்கு அரசியலில் அனுபவம் இருக்கான்னு கேட்பவர்கள் நிச்சயம் முட்டாள்கள்தான். உதய் அண்ணா சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் நின்னு ஜெயிச்சுக் காட்டியிருக்கார். மக்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்திருக்காங்க.
அதுவும், தொடர்ச்சியா களப்பணி ஆற்றிக்கிட்டு வர்றார். சட்டமன்ற உறுப்பினர், விளையாட்டுத்துறை அமைச்சர், துணை முதல்வர்-ன்னு படிப்படியா முன்னேறியிருக்கார். எடுத்தவுடனே துணை முதல்வர் பதவியைக் கொடுக்கல. ஆனா, விஜய் சார் எடுத்தவுடனே முதல்வர் ஆகிட துடிக்கிறார். வரும் தேர்தலில் எத்தனை ஓட்டு வாங்கிடுறார்னு பார்ப்போம்" என்று சேலஞ்ச் செய்பவரிடம்,
"விஜய்யைப் பார்த்து உதயநிதி பயப்படுகிறார்... அதனால்தான், திமுகவினர் விஜய்யைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று தவெகவினர் கூறுகிறார்களே? மேலும், விஜய் மீதான உங்கள் விமர்சனங்களுக்கு அப்பா சத்யராஜ் என்ன சொன்னார்?" என்றோம்,
"ரஜினி சார், நேற்று வந்த புதுமுகத்தைப் பார்த்து பயப்படுவாரா? அப்படித்தான், நேற்று வந்த புதுமுகமான விஜய் சாரைப் பார்த்து, உதய் அண்ணா பயப்படுறார்னு சொல்றதை ஏத்துக்கவே முடியாது. அது, நியாயமும் கிடையாது.
மற்றபடி, நான் ஒரு அடல்ட். இது என்னுடைய தனிப்பட்ட அரசியல் கருத்து. என் கருத்துகளில் அப்பா எப்போதும் தலையிடுறது கிடையாது. அண்ணனும் அப்படித்தான். அப்பா-மகளா, அண்ணன் - தங்கையா ரொம்ப அன்போட இருப்போமே தவிர, அரசியல்; கொள்கைன்னு வந்துட்டா எல்லோரும் தனி வழிதான். இப்போ, எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனா, என் பெஸ்ட் ஃபிரண்டும் அப்படி இருக்கணும்னு அவசியமில்லை இல்லையா? அப்படித்தான், இந்த விஷயத்தையும் எடுத்துக்கணும். அதுவும், எங்கக் குடும்பமே ரொம்ப முற்போக்கான குடும்பம். அப்படியிருக்கும்போது, என்னோட தனிப்பட்ட விருப்பு,வெறுப்பு, கருத்துகளில் எப்படி தலையிடுவாங்க? அந்த விஷயத்துல நான் ரொம்ப லக்கின்னுதான் சொல்லணும்" என்கிறார் புன்னகையுடன்.