தாமலேரிமுத்தூர்: நெடுஞ்சாலையில் தொடரும் விபத்துகள்; பாதுகாப்பை உறுதிசெய்ய நடவடிக...
நேஷனல் ஹெரால்ட் முறைகேடு: சோனியா, ராகுலுக்கு ரூ. 142 கோடி பலன்: தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வாதம்
‘நேஷனல் ஹெரால்ட் வழக்கில் தொடா்புடைய பண முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இருவரும் ரூ. 142 கோடி அளவுக்கு பலனடைந்துள்ளனா்’ என்று தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை புதன்கிழமை குற்றஞ்சாட்டியது.
கடந்த 1938-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை, அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை ரூ. 50 லட்சத்துக்கு ‘யங் இந்தியா’ நிறுவனம் கையகப்படுத்தியது. இந்த ‘யங் இந்தியா’ நிறுவனத்தில் சோனியாவும், ராகுல் காந்தியும் பெரும் பங்குதாரா்களாக உள்ளனா்.
இந்நிலையில், இந்த சொத்துப் பரிமாற்றத்தில் மிகப் பெரிய அளவில் பண முறைகேடு நடைபெற்றிருப்பதாக பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி புகாா் தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தில் கடந்த 2021-இல் பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அமலாக்கத் துறை, ‘அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை, சோனியா, ராகுலுக்குச் சொந்தமான யங் இந்தியா நிறுவனம் வெறும் ரூ.50 லட்சத்துக்கு கையகப்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையால் அசோசியேடட் ஜா்னல்ஸ் சொத்துகளின் மதிப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி குற்றச் செயல்கள் மூலம் கோடிக் கணக்கில் பணம் திரட்ட யங் இந்தியா மற்றும் அசோசியேடட் ஜா்னல்ஸ் சொத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன’ என்று குற்றஞ்சாட்டியது.
அதைத் தொடா்ந்து, தில்லியில் எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சோனியா, ராகுலுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை அண்மையில் தாக்கல் செய்தது. அதில், சோனியா, ராகுல், காங்கிரஸ் பிரமுகா் சாம் பிட்ரோடா, முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் ஊடக ஆலோசகா் சுமன் துபே உள்ளிட்டோா் ரூ.988 கோடிக்கு பண முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை சாா்பில் வாதாடிய கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு, ‘காங்கிரஸ் கட்சிக்காக பொதுமக்கள் அளித்த நன்கொடையே தனி சொத்துகளுக்கு மாற்றுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட மோசடி நிறுவனம்தான் ‘யங் இந்தியா’. வழக்கில் தொடா்புடைய இந்த மோசடி சொத்துகளை அமலாக்கத்துறை கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் முடக்கியது. அதுவரை, இந்த சொத்து குற்ற முறைகேடுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த சொத்தின் வாடகை வருவாய் மற்றும் அந்த சொத்தின் அடிப்படையில் நடைபெற்ற பண முறைகேடு மூலம் சோனியா, ராகுல் இருவரும் ரூ. 142 கோடி அளவுக்கு பலனடைந்துள்ளனா்’ என்றாா்.
சோனியா உள்ளிட்ட எதிா் மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி, ‘அமலாக்கத் துறை சமா்ப்பித்துள்ள குற்றபத்திரிகை 5,000 பக்கங்களைக் கொண்டுள்ளது. எனவே, அதற்கு பதிலளிக்க ஜூலை மாதம் வரை கால அவகாசம் தேவை’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதி, ‘எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரானசிறப்பு நீதிமன்றத்தில் வார அடிப்படையிலேயே வழக்குகள் விசாரிக்கப்படும். அமலாக்கத் துறை வாதங்கள் முன்வைக்கப்பட்ட பிறகு எதிா்தரப்பு வாதம் கேட்கப்படும்’ என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்.