நவ.30ஆம் தேதி கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: ஆனால்.. பாலச்சந்திரன் தகவல்
``பசங்க 10 கி.மீ ஸ்கூலுக்கு நடக்குறாங்க!, பஸ் வசதியும் இல்ல!'' - சரிகமப தர்ஷினியின் தந்தை உருக்கம்!
சரிகமப லிட்டில் சாம்ப்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சியின் இந்த சீசனில் திண்டிவனம் அருகிலுள்ள அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தர்ஷினி என்ற 8-ம் வகுப்பு மாணவி பங்கேற்று பாடி வருகிறார். கடந்த வாரம் தர்ஷினி அவர் வசிக்கும் அம்மணம்பாக்கம் பகுதிப் பற்றி பேசிய சில விஷயங்கள் நிகழ்ச்சியின் நடுவர்கள் உள்பட பலரையும் கலங்க வைத்தது.
அம்மணம்பாக்கத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதற்கு மேல் படிப்பதற்கு அம்மணம்பாக்கத்திலுள்ள குழந்தைகள் அனைவரும் 5 கி.மீ பயணித்து அனந்தமங்கலம் பகுதியில் இருக்கிற பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பஸ் வசதிகள் இல்லாததால் தினமும் 5 கீ.மி நடந்து சென்று வீடு திரும்பும் அவல நிலை நிலவி வருகிறது. இதனால் அவதிப்படும் குழந்தைகளைக் கண்டு பலரும் இது தொடர்பாக உரிய இடத்தில் பேசியதாகவும் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.
`கல்வி கற்க தான் பள்ளிக்கூடத்திற்குச் சென்றதால்தான் இன்று இந்த மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுபோன்ற வாய்ப்புகள் அம்மணம்பாக்கத்திலுள்ள மற்ற குழந்தைகளுக்கும் அமைய வேண்டும்!' என்பதை எண்ணி தர்ஷினி தனது ஊருக்கு பஸ் வசதி வேண்டி சரிகமப மேடையில் பேசியிருந்தார். நிகழ்ச்சியின் நடுவர்களும், `` அம்மணம்பாக்கம் கிராமத்திற்கு வாகனம் வசதி ஏற்பாடு செய்துக் கொடுக்க வேண்டும். அந்த ஊரிலுள்ள அத்தனை பேருடைய வாழ்க்கையும் மாற வேண்டும்!" எனப் பேசியிருந்தனர்.
இது குறித்து கூடுதல் தகவல்களை தெரிந்துக் கொள்ள தர்ஷினியின் தந்தை ராஜ்குமாரை தொடர்புக் கொண்டு பேசினோம். அவர், `நான் பம்பை அடிக்கிறவன். கோவில் திருவிழாக்களுக்கெல்லாம் போய் நான் பம்பை அடிப்பேன். அப்படி நாங்க பாடுறதை பார்த்துதான் தர்ஷினி பாப்பாவுக்கும் ஆர்வம் வந்தது. ரொம்பவே அருமையாக தர்ஷினி தெய்வீக பாடலைகளை பாடுவாங்க. பாப்பவோட திறமையை கவனிச்ச ஸ்கூல் வாத்தியார் ஒருவர் மற்ற பள்ளிகள்ல நடக்குற கலை விழாக்களுக்கு அழைச்சுட்டு போவாரு. பாப்பா அப்படிதான் பல இடங்களிலும் பாட ஆரம்பிச்சா, இன்னைக்கு சரிகமபா நிகழ்ச்சியில பாடுகிறாள்.' என பேசியவர், ``தர்ஷினி 8-வது படிக்கிறாங்க. அவங்க படிக்கிற பள்ளி செங்கப்பட்டு மாவட்டத்துல இருக்கிற அனந்தமங்கலம் பகுதியில இருக்கு.
நாங்க விழுப்புரம் மாவட்டம் அம்மணம்பாக்கம் பகுதியில இருக்கிறோம். கடந்த வாரம் நிகழ்ச்சியிலகூட எங்க ஊர்ல இருந்து அனந்தமங்கலத்துக்கு படிக்க போகிற புள்ளைங்களுக்கு பஸ் வசதி இல்லைனு பேசியிருந்தோம். ஊர்ல இருந்து 5 கி.மீ தொலைவுல பள்ளிக்கூடம் இருக்கு. புள்ளைங்க தினமும் பள்ளிக்கூடத்துக்கு நடந்து போயிட்டு திரும்ப நடந்து வர்றாங்க. அனந்தமங்கலம் போகிறதுக்கு பஸ் இருக்கு. ஆனா அந்த பஸ் பிடிக்கிறதுக்கு நாங்க வைரபுரம்ங்கிற ஊருக்கு போக வேண்டியதாக இருக்கு.
நாங்க டவுனுக்கு போகிறதாக இருந்தாலும் வைரபுரம் வந்துதான் பஸ் பிடிச்சு போக வேண்டியதாக இருக்கு. 30 குழந்தைகள்கிட்ட தினமும் எங்க ஊர்ல நடந்து பள்ளிக்கூடத்துக்குப் போறாங்க. ரொம்ப காலமாக எங்க புள்ளைங்க கஷ்டப்படுறாங்க." என்றவரிடம் இத்தனை வருடமாக எந்தவொரு நடவடிக்கையும் எவரும் எடுக்கவில்லையா எனக் கேள்வி எழுப்பினோம். அவர், ` இந்த ஊர் நடுவுல இருக்கு, கொஞ்ச பேருக்காக இதை பண்றதானு பேசுறாங்க. இதையெல்லாம் தாண்டி சில வீடுகள்ல டூ வீலர் வச்சிருக்காங்க.
வேலைக்கு கிளம்பும்போது அவங்க குழந்தைகளை விட்டுறாங்க. அப்படி பண்ண முடியாதவங்களோட நிலைமை? குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்திடலாம். ஆனா, புள்ளைங்களை தனியாக அவ்வளவு தொலைவுல அனுப்புறதுக்கும் பயமாக இருக்கு. டூ வீலர்ல வர்றவங்க ராங் ரூட்ல வந்துட்டால் குழந்தைங்க சரியாக ஓட்டமாட்டங்க. இந்த விஷயத்துனால அவங்களை சைக்கிளில் அனுப்பவும் பயமாக இருக்கு.
இப்போ நான் என் குழந்தைக்காக பேசல. தர்ஷினி பள்ளிக்கூடத்துக்கு போனதுனாலதான் இன்னைக்கு இந்த மேடையில வந்து பாடுறா...பஸ் வசதி எங்க ஊர்ல இருந்தால் மற்ற குழந்தைகளோட கல்விக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு பொறுப்பானவங்ககிட்ட இந்த குழந்தைகளோட நிலைமையை ஏற்கெனவே எடுத்துச் சொல்லியிருக்கோம். அவங்களும் `சொல்லியிருக்கேன்... பஸ் அனுப்புவாங்க'னுதான் ரொம்ப நாள்களாக சொல்லிட்டு இருக்காங்க.
பள்ளிக்கூடத்தை தாண்டி நாங்க ஏதாவது ஒரு அவசரத்துக்கு மருத்துவமனைக்கு போகணும்னாலும் பக்கத்துக்கு ஊருக்குதான் போக வேண்டியதாக இருக்கு. சின்னதாக ஒரு மருத்துவமனை எங்க ஊர்ல இருக்கு. ஆனால், ஒரு பெரிய விஷயம்னா நாங்க திண்டிவனத்துக்குதான் போக வேண்டியதாக இருக்கு. அந்த நேரத்து அவசரத்துக்காக வேற வழியில்லாமல் ஆட்டோவுலதான் பயணிச்சு போவோம். இப்போ சில வருஷமாக மினி பஸ் விட்டிருக்காங்க. அந்த பஸ் திண்டிவனத்துல இருந்து வரும். ஆனால், அதே பஸ் குழந்தைங்க படிக்கிற பள்ளிக்கூடம் இருக்கிற ஊருக்கு போகாது." என்றார் வருத்தமுடன்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...