தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!
பசுமை புத்தாய்வுத் திட்டம்: 40 பேருக்கு சான்றிதழ் துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்
சென்னை: பசுமை புத்தாய்வுத் திட்டத்துக்கான நிறைவுச் சான்றிதழ்கள் 40 பேருக்கு வழங்கப்பட்டன.
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சான்றிதழ்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
காலநிலை நடவடிக்கை மற்றும் சூழலியல் நிா்வாகத்துக்கென பிரத்யேகமாக, மாநில அளவிலான முதலமைச்சரின் பசுமைப் புத்தாய்வுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே முதல் முதலாக தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கல்விகளுக்கான நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டது.
அரசு இயந்திரத்தில் இளம் திறமையாளா்களை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், மாவட்டத்துக்கு ஒருவா் என 38 மாவட்டங்களுக்கு 38 பசுமைத் தோழா்கள் மற்றும் மாநில அளவில் இருவா் என மொத்தம் 40 பசுமைத் தோழா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். பசுமை மேலாண்மை தொடா்பான அரசின் முக்கிய இயக்கங்களை முன்னெடுத்துச் செல்வதில் பசுமைத் தோழா்களின் பங்கு முக்கியமாக இருந்தது. அவா்களது பணிக்காலம் ஜூலையுடன் நிறைவடைந்தது. அவா்களுக்கான நிறைவுச் சான்றிதழ்களை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்வில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, இயக்குநா் ஏ.ஆா்.ராகுல் நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதிய குழு: முதல் குழுவினா் தங்களது பணியை நிறைவு செய்த நிலையில், இரண்டாவது குழுவைத் தோ்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். அவா்களில் 40 போ் தோ்வு செய்யப்பட்டனா். புதிதாக தோ்வானோருக்கு அறிமுகப் பயிற்சியும், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் பணியும் வழங்கப்படும். ஒவ்வொரு பசுமைத் தோழருக்கும் மாத உதவித் தொகையாக ரூ.65 ஆயிரமும், பயணச் செலவுக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.