பஞ்சாப்பில் எமர்ஜென்சி ரிலீஸ் சிக்கல்..! கங்கனா ரணாவத் வேதனை!
எஸ்ஜிபிசி (சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு) கங்கனாவின் எமர்ஜென்சி படத்தை பஞ்சாப்பில் திரையிட வேண்டாமென கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு நடிகை கங்கனா இது முற்றிலும் கலை, கலைஞர்களை துன்புறுத்தும் செயல் எனக் கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் நெருக்கடி நிலையினைப் பற்றி தானே எழுதி இயக்கி நடித்துள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.
சீக்கியர்கள் பிரச்னைகளால் இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கொடுக்கப்படாமல் ரிலீஸ் தள்ளிப்போனது. பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டு, இன்று (ஜன.17) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
எஸ்ஜிபிசி (சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு) தலைவர் ஹரிந்தர் சிங் தாமி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எமர்ஜென்சி படத்தை பஞ்சாபில் தடை செய்ய வேண்டுமென கடிதம் எழுதினார்.
இதனால் பஞ்சாபின் பல பகுதிகளில் எம்ர்ஜென்சி படம் திரையிடப்படவில்லை. பல திரையரங்குகளின் அருகில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கங்கனா ரணாவத் கூறியதாவது:
பஞ்சாபில் பல பகுதிகளில் எமர்ஜென்சி படத்தை திரையிட அனுமதிக்காதது கலை, கலைஞர்களை முற்றிலும் துன்புறுத்தும் செயலாகும்.
எனக்கு எல்லா மதங்களின் மீதும் மரியாதை இருக்கிறது. சண்டிகரில் வளர்ந்ததால் நான் சீக்கிய மதத்தை மிக அருகில் இருந்து கவனித்தும் பின்பற்றியும் வந்திருக்கிறேன்.
எனது பெயரையும் என்னுடைய படத்தையும் களங்கப்படுத்த உண்டாக்கிய பொய்யான பரப்புரைகள் எனக் கூறியுள்ளார்.
38 வயதான கங்கனா ரணாவத் கடந்தாண்டு மக்களவைத் தேர்தலில் ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு கங்கனா ரணாவத் வென்றார்.
சீக்கியர்களை தவறாக சித்தரித்துள்ளதால் எமர்ஜென்சி படம் வெளியாகக் கூடாதென பலரும் கருத்து தெரிவித்த நிலையில் கங்கனா ரணாவத்தின் இந்த பதிவு பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே, தயாரிப்பாளர்களுக்கு எஸ்ஜிபிசி நோட்டீஸ் அனுப்பியிருந்ததும் தணிக்கை வாரியம் தாமதமாக சான்றிதழை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.