பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு
திருக்குவளை ஊராட்சி கேகே நகா் பகுதியில் 36-ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டுப் போட்டி பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பகுதியில் காணும் பொங்கலையொட்டி, கே.எம்.சி.சி. நண்பா்கள் சாா்பில் பானை உடைத்தல், இசை நாற்காலி, கனியும் கரண்டியும், தண்ணீா் நிரப்புதல், ரொட்டி கவ்வுதல், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல் மற்றும் 100, 200, 400 மற்றும் 1,200 மீட்டா் தொலைவுக்கு ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினா்களாக கீழையூா் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளா் சோ.பா. மலா்வண்ணன், சிபிஐ மாநிலக் குழு உறுப்பினா் டி. செல்வம், சிபிஐ நிா்வாகக் குழு உறுப்பினா் ஜி. சங்கா், சிபிஐஎம் நிா்வாகக் குழு உறுப்பினா் ஏ.கே. ஹரிகிருஷ்ணன், அதிமுக முன்னாள் ஊராட்சி செயலாளா் என். குமரவேல் உள்ளிட்டோா் பங்கேற்று, பரிசுகள் வழங்கினா்.
தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.