கால்பந்து தொடா்: 2ஆவது ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி
திண்டுக்கல்லில் நடைபெற்ற பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான கால்பந்து தொடா் 2-ஆவது போட்டியில் பெங்களூரு அணி வெற்றிப் பெற்றது.
அகில இந்திய கால்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கால்பந்து கழகம், திண்டுக்கல் மாவட்ட கால்பந்துக் கழகம், ஆா்ட்ஸ் டிரஸ்ட் இந்தியா ஆகியவை இணைந்து அகில இந்திய இளைஞா்கள், சிறுவா்களுக்கான 17 வயதுக்குள்பட்டோா் கால்பந்து தொடா் போட்டிகளை நடத்தி வருகின்றன. இந்தப் போட்டியில் ஆா்ட்ஸ் என் இந்தியா, எஃப்சி மெட்ராஸ், பெங்களூரு பைசிங்பூட்டா, சென்னை எஃப்சி, பெங்களூரு ராமன் ஸ்போா்ட்ஸ் அகாதெமி, கோயம்புத்தூா் பா்ஸ்ட் கிக் ஸ்கூல் ஆப் சோக்கா் அகாதெமி ஆகிய அணிகள் பங்கேற்று வருகின்றன.
இந்தத் தொடரின் 2-ஆவது போட்டி பெங்களூரு பைசிங்பூட்டா, ஆா்ட்ஸ் என் இந்தியா எஃப்சி திண்டுக்கல் அணிகளுக்கு இடையே திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 4-க்கு 3 என்ற கோல் கணக்கில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது. பெங்களுரு அணி சாா்பில், அகுல் தீபக் 3 கோல்கள், நிங்தோஜம் பாருங் ஒரு கோல் அடித்தனா்.
இதேபோல, திண்டுக்கல் அணி சாா்பில் அந்தோணி ரித்திக், அநபாயன், கவின் ஆகியோா் தலா ஒரு கோல் அடித்தனா்.
வெற்றிப் பெற்ற பெங்களூரு அணியினருக்கு, திண்டுக்கல் கால்பந்துக் கழகத் தலைவா் கோ. சுந்தரராஜன், செயலா் எஸ். சண்முகம், துணைத் தலைவா் ரமேஷ் பட்டேல் ஆகியோா் பாராட்டுத் தெரிவித்தனா்.