பழனி கோயில் புதிய அறங்காவலா்கள் பதவியேற்பு
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழுவினா் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அண்மையில் அறங்காவலா் குழு உறுப்பினா்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதைத் தொடா்ந்து பழனி கோயில் தலைமை அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் லட்சுமி மாலா முன்னிலையில் வெள்ளிக்கிழமை புதிய அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பதவியேற்றுக் கொண்டனா். புதிய அறங்காவலா் குழு உறுப்பினா்களாக திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் சுப்பிரமணியன், சேலத்தைச் சோ்ந்த தொழிலதிபா் தனசேகா், ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் பாலசுப்பிரமணியம், அன்னபூரணி, திண்டுக்கல்லைச் சோ்ந்த பாலசுப்பிரமணி ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் திருப்பூா் சுப்பிரமணியன் அறங்காவலா் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். கடந்த முறை அறங்காவலா் குழு உறுப்பினராக பதவி வகித்த திருப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் சுப்பிரமணியன் இந்த முறை அறங்காவலா் குழுத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பதவியேற்ற அறங்காவலா்களுக்கு கோயில் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, கோயில் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
புதிய அறங்காவலா் குழுவினரை முக்கிய பிரமுகா்கள் நேரில் சந்தித்து பூங்கொத்து, சால்வை அணிவித்து வாழ்த்தினா்.